ஒரு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கபட்ட ஏ.எல்.எஸ் ஐஸ் பக்கெட் சவால் உலகம் முழுவதும் பரவியது. சமூக அக்கறையுடன் அதை வெவ்வேறு வடிவங்களில் மாற்றி சவால் விட்டு வருகின்றனர். ரைஸ் பக்கெட் சவால், பால் பாக்கெட் சவால் என பல சவால்கள்.
அந்த வரிசையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தன் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து ‘மை ட்ரீ சேலஞ்ச்’ என்ற புதுவகையான சவால் ஒன்றை துவக்கினார். உலகம் வெப்பமயமாகலை தடுப்பதற்காகவும் மரம் வளர்த்து பூமியை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் இதை செயல்படுத்துவதாக அறிவித்திருக்கிறார்.

மேலும் இந்த சேலஞ்சை விஜய், சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் ஏற்கும்படியும் அவர் சவால் விட்டிருந்தார்.

கத்தி பட பிரச்சினையில் டென்சனாக இருக்கும் விஜய் இந்த சவாலை ஏற்பாரா? என்ற சிந்தனையில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. மம்முட்டியின் சவாலை ஏற்று ஒரு மரக்கன்றை நட்டு வைத்து அதை புகைப்படம் எடுத்து தனது வலைப்பக்கத்தில் போட்டுள்ளார்.

மம்முட்டி மை ட்ரீ சேலஞ்சை அறிவித்த சிலமணி நேரங்களில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் மரக்கன்றுகள் நட்டு அதை படமெடுத்து அனுப்ப ஆரம்பித்தனர். அதேபோல் விஜய் ரசிகர்களும் தங்கள் வீடுகள்தோறும் மரக்கன்று வைத்து இந்த மை ட்ரீ சேலஞ்சை பின்பற்றுவார்களா? பார்க்கலாம்!

Loading...