இந்தி நடிகைகளின் சம்பளத்தில் மூன்றில் ஒன்று தான் நாங்கள் வாங்குகிறோம்: காஜல்!

புதிய படங்களில் நடிக்க அதிக சம்பளம் கேட்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக விஜய் ஜோடியாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார் காஜல் அகர்வால். தற்போது தெலுங்குப் படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல், பாலாஜி மோகன் இயக்கும் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியிலும் காஜல் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. இதற்கிடையே, புதிய படங்களில் நடிக்க காஜல் அகர்வால் அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை நிர்பந்திப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அதில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளம் கொடுத்தால் தான் காஜல் நடிக்க சம்மதிப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், தனது சம்பள விவகாரம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் காஜல். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

நான் அதிக சம்பளம் கேட்பதாக தொடர்ந்து வதந்திகள் பரவுகின்றன. நடிகைகளுக்கு சம்பளம் அவர்களது மார்க்கெட் நிலவரப்படிதான் நிர்ணயிக்கப்படுகிறது.

என் சம்பளத்தையும் அதுபோல்தான் வாங்குகிறேன். உறுதியாக நிறைய சம்பளம் வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கட்டாயப்படுத்தவில்லை.

ரூ.1 கோடி மற்றும் ரூ.1.5 கோடி என்பது பொதுவான சம்பளம்தான். இந்தி நடிகைகள்தான் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்குதான் நாங்கள் வாங்குகிறோம்.

எங்கள் தொழிலில் நிறைய ஆபத்துகள் இருக்கிறது. ஆடைகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டி உள்ளது. வருமான வரியும் செலுத்துகிறோம்.

நாங்கள் கேட்கும் சம்பளத்தை யாரும் கொடுத்து விடுவது இல்லை. தயாரிப்பாளர்கள்தான் சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள்’ என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Loading...