தரமான நடிகர்கள் இருவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி, மாதவன் என்ற இரண்டு தரமான நடிகர்கள் இணைந்து நடித்த விக்ரம் வேதா இன்று உலகம் முழுவதும் வெளிவர, இருவருமே மிரட்டினார்களா? பார்ப்போம்.

கதைக்களம்

விக்ரமாக மாதவன் வேதாவாக விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே நடக்கும் நியாயப்போராட்டமே விக்ரம்வேதா ஒன் லைன். மாதவன் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், அவரின் ஒரே டார்கெட் வேதா.

எல்லோருமே வேதாவை எதிர்நோக்கி காத்திருக்க, வேதா தானாகவே வந்து போலிஸில் சரண் அடைகிறார். அதை தொடர்ந்து அவர் மாதவனிடம் தன் கதையை கூற ஆரம்பிக்கின்றார்.

அப்படி கூறுகையில் மாதவனுக்கு ஒரு சில விஷயங்கள் புரிய வருகின்றது. வேதாவை நாம் தேடி போகின்றோமா? இல்லை வேதா நம்மை தேடி வந்தானா? அப்படி வந்தால் எதற்காக வந்தான்? என பல சுவாரசிய முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது.

படத்தை பற்றிய அலசல்

ஒரு போலிஸ் ஒரு திருடன் என இதுவரை பல படங்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு வகை தான் இந்த விக்ரம்வேதா I saw the devil, Dark Knight போன்ற படங்கள் போல ஒரு ஆடுபுலி ஆட்டமே இந்த விக்ரம்வேதா.

இதில் டார்க் நைட் சாயல் கொஞ்சம் தூக்கல் தான், மாதவன் இதற்கு பிறகு தான் சிறந்த நடிகர் என்று நிரூபிக்க தேவையில்லை, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டை இதற்கு மேல் நம் கண்முன் யதார்த்தமாக கொண்டு வரமுடியாது.

அவருக்கு கொஞ்சம் கூட குறை வைக்கவில்லை விஜய் சேதுபதி. எப்போதும் மாதவனை தேடி வந்து ஒரு கதை சொல்கிறேன் என ஒரு கதையை ஓபன் செய்து அதிலிருந்து மாதவனுக்கு சில ஐடியா கிடைத்து, அதன் மூலம் விஜய் சேதுபதி தனக்கு தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்வது என மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு திரைக்கதை.

அதிலும் குறிப்பாக தன் மனைவியின் கையில் ஏற்படும் காயம், வரலட்சுமி கையில் இருக்கும் துப்பாக்கியை வைத்தும் மாதவன் கண்டுப்பிடிக்கும் காட்சிகள் சுவாரசியம். ஒரு தருணம் யார் நல்லவன், யார் கெட்டவன், எது தீர்மாணிக்கின்றது என்பதை மிக அழகாக காட்டியுள்ளனர் புஷ்கர்-காயத்ரி.

வினோத்தின் ஒளிப்பதிவு வடசென்னையின் நிழல் உலகத்தை கண்முன் கொண்டு வருகின்றது. சாம் இசையின் பின்னணி மிரட்டல், அதிலும் விஜய் சேதுபதிக்கு வரும் பின்னணி பாடல் பாதி கதையை சொல்கின்றது.

க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு.

டெக்னிக்கல் விஷயங்கள், கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.

படத்தின் வசனம் பெரும் பலம் ‘உன் கையில் ரூ 10 கோடி கொடுத்தால், நீ என்னை இங்கு விட்டு, பிறகு மீண்டும் அந்த ரூ 10 கோடி பணத்தை என்னிடம் கொள்ளையடிக்க தான் வருவாய்’ என மாதவன் விஜய் சேதுபதியிடம் பேசும் பல வசனங்கள் யோசித்தாலே புரியும் வகை.

பல்ப்ஸ்

கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை, அத்தனை சுவாரசியம், நுணுக்கமாக செல்லும் படத்தில் கிளைமேக்ஸ் சண்டை கொஞ்சம் யதார்த்தம் விலகி நிற்கின்றது.

மொத்தத்தில் வேதா கதை சொல்ல ஆரம்பித்தால் பரபரப்பாவது விக்ரம் மட்டுமில்லை, ஆடியன்ஸும் தான்.

Loading...