நடிகர் சங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை..!

எற்கெனவே நடிகர் சங்கத் தேர்தலில் பல்வேறு உள்குத்துகள் நடைபெற்று வருகின்றன.

நேர்மையான கருத்து முன் வைப்புகளெல்லாம் மோதல்களாக மாறி அவைகள் தனிப்பட்ட மோதல்களாகவும் உருமாறிவிட்டன.

‘வாடா’, ‘போடா’ என்றெல்லாம் நாகரிகமான வார்த்தைகளை நடிகர்களே சரளமாக உதிர்த்ததை கேட்டு குமரி எல்லையில் டீ விற்பவர்கூட நம்ம பரவாயில்லையே என்று நினைக்கும் அளவுக்கு அசிங்க்மாகி கிடக்கிறது.

கூடுதல் இணைப்பாக நடிகர் விஷாலை ‘ரெட்டி’ என்று ராதிகா சொல்ல, ’ராதிகாவே ஒரு நாயுடு, சிங்களர்தானே’ என்று பதில் குரல்கள் எழும்ப நடிகர் சங்கத்தில் ஜாதி, இனம், தமிழர், தமிழரல்லாதவர் என்கிற பிரச்சினையெல்லாம் கலந்து கட்டி அரசியல் சாக்கடையாகிவிட்டது.

இப்படி அவர்களே அசிங்கப்பட்டு நிற்கும் சூழலில் வெளியில் இருந்தும் அதே போன்ற பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

‘தமிழ் நடுவம்’ என்கிற அமைப்பு இது தொடர்பாக களத்தில் குதித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தலில் தமிழரல்லாத பிற மொழியினர் போட்டியிடுவதை கண்டித்தும், ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என்று மாற்றக் கோரியும், நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள 18-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள புனித எப்பாஸ் பள்ளியை பல்வேறு தமிழ்த் தேசிய உணர்வாளர்களை ஒருங்கிணைத்து அனைத்து அமைப்புகளின் சார்பாக முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

போற போக்கைப் பார்த்தா இந்திய அளவுக்கு இந்த நடிகர் சங்கத் தேர்தலை பிரபலப்படுத்தாம ஓய மாட்டாங்க போலிருக்கு..!

Loading...