குஷ்பு 44வது பிறந்தநாள்… டிவிட்டரில் வாழ்த்து சொன்ன சிவகார்த்திக்கேயன்

நடிகை குஷ்பு தன்னுடைய 44 வது பிறந்த நாளை நேற்று எளிமையான முறையில் கொண்டாடினார். அவருக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் டிவிட்டர் மூலம் வாழ்த்து கூறியுள்ளார். 1970ம் ஆண்டு மும்பையில் ஒரு நடுத்தர முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் குஷ்பு. 13 வயதில் தி பர்னிங் டிரைய்ன் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்திப் படங்களில் சிறிய வேடங்களில் நடித்த குஷ்பு, கலியுக பாண்டவலு என்ற படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்தார். அடுத்து தர்மத்தின் தலைவன், வருஷம் 16 ஆகிய படங்களின் மூலம் தமிழுக்கு வந்தார்.

ரஜினி, கமல்,விஜயகாந்த் தொடங்கி முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தார். கார்த்திக் முதல், பிரபு வரை கிசுகிசுக்கப்பட்டவர் கடைசியில் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளானார். அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு குழந்தைகளின் தாயானார்.

நடுத்தர வயதை தாண்டியதும் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தொலைக்காட்சி பக்கம் போனார். அவர் ஆரம்பித்த ஜாக்பாட் தமிழ்நாட்டு பெண்களை கட்டிப்போட்டது. அந்த நிகழ்ச்சியை விட அவர் அணிந்த ஜாக்கெட்டுகள் பிரபலமானது. குங்குமம் கல்கி, ஜனனி, பார்த்த ஞாபகம் இல்லையோ ஆகிய தொடர்கள் மூலம் எல்லா வீட்டுக்குள்ளும் வந்து போனார்.

தன் சம்பளத்தில் 25 சதவிதத்தை சென்னையில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு அப்படியே கொடுத்து விடுவார் என்பதும், வெளி உலகம் தெரியாமல் அவர் பலருக்கு பல உதவிகளை செய்து வருவதும், யார் உதவி என்று சென்றாலும் தன்னால் முடிந்ததை செய்வதும் வெளிஉலகம் அறிந்திராத குஷ்புவின் இன்னொரு முகம்.

2010ல் தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். தி.மு.கவில் அவருக்கு ஆதரவு குறைவாகவும், எதிர்ப்பு நிறையவும் இருந்தது. எனவே அரசியலை விட்டு விலகினார் குஷ்பு.

ஒரு நடிகையாக, குடும்ப தலைவியாக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, பெண்ணியவாதியாக, பேச்சாளாராக, அரசியல்வாதியாக தன்னை நிரூபித்த குஷ்பு தற்போது புதிய டிவி சேனல் ஒன்றின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

தமிழகத்தில் தற்போது அரசியல் சூழ்நிலைகள் சரியில்லாத காரணத்தால் தன்னுடைய 44 வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடி முடித்துள்ளார். நடிகை குஷ்புவிற்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு பதிலுக்கு குஷ்புவும் நன்றி கூறியுள்ளார்.

Loading...