திருத்தப்பட்ட காட்சிகளுடன் தீபாவளி ரேசில் புலிப்பார்வையும் குதித்தது!

இந்த தீபாவளிக்கு கத்தி, பூஜை என இரு தமிழ்ப் படங்கள்தான் என்று கூறப்பட்ட நிலையில், சர்ச்சைக்குள்ளான புலிப்பார்வை படமும் இந்த ரேசில் குதித்தது.

வேந்தர் மூவீஸ் பாரிவேந்தர் தயாரிப்பில், பிரவீண் காந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புலிப் பார்வை. ஈழப் போராட்டத்தைப் பின்னணிக் களமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குநர் தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தை இதில் பதிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் படத்தின் புகைப்படங்களில் பாலச்சந்திரன் ஒரு சிறார் போராளியாகக் காட்டப்பட்டுள்ளதாகவும், படம் முழுக்க சிங்கள ராணுவத்துக்கு ஆதரவான கருத்துகள், காட்சிகள் உள்ளதாகவும் கூறி எதிர்ப்பு கிளம்பியது.

இதைத் தொடர்ந்து தமிழீழ ஆதரவாளர்கள் இந்தப் படத்தைப் பார்த்த பிறகே அனுமதிக்க முடியும் என்று போராட்டங்கள் நடத்தினர். அதன்படி, பழ நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர், மாணவர் அமைப்பினருக்கு இந்தப் படம் போட்டுக் காட்டப்பட்டது.

அப்போது படத்தில் பல காட்சிகளை மாற்ற வேண்டும், குறிப்பாக பாலச்சந்திரன் புலிகளின் சீருடையில் இருப்பது போன்ற காட்சியை மாற்ற வேண்டும் என்று கோரினர். உடனடியாக அதனை ஏற்றுக் கொள்வதாகக் கூறிய தயாரிப்பாளர் மதன், தமிழர் உணர்வுகளைப் புண்படுத்தும் எந்தக் காட்சியும் படத்தில் இருக்காது என உறுதியளித்தார்.

அதன்படி படத்தின் காட்சிகளை கடந்த சில தினங்களாக மாற்றியமைத்தனர். இப்போது படத்தை தீபாவளிக்கே வெளியிட முடிவு செய்து, விளம்பரங்களையும் ஆரம்பித்துள்ளனர். இப்போதைய நிலவரப்படி, கத்தி 400 அரங்குகளிலும், பூஜை 350 அரங்குகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புலிப்பார்வையும் வெளியாவதால், அதற்கும் கணிசமான அரங்குகளை ஒதுக்க முடிவு செய்துள்ளனர். புலிப்பார்வையின் தயாரிப்பாளரான வேந்தர் மூவீஸ்தான் பூஜையை வெளியிடுகிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.

Loading...