எத்தனை நாளைக்கு சீரியஸான கதைகளையே பண்ணுவது.. இப்படிப்பட்ட படங்களை உருவாக்குவதால் எனக்கு மன அழுத்தம்தான் அதிகமாகிறது. இனி நானும் கமர்ஷியல் ரூட்டுக்கு மாறப் போகிறேன் என்றார் இயக்குநர் வசந்தபாலன். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த்-வேதிகா நடித்துள்ள படம் ‘காவியத் தலைவன்’. இப்படம் வருகிற நவம்பர் 14-ல் வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் குறித்து செய்தியாளர்களிடம் வசந்தபாலன் கூறியதாவது:

காவியத்தலைவன் ஒரு சாதாரண கமர்ஷியல் படம் கிடையாது. நீண்ட நாட்களுக்கு பிறகு இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம். இப்படம் நாடகம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் கதையோடு, பாடல்களும் சேர்ந்து பயணிக்கும். இதற்காக ஏ.ஆர்.ரஹ்மானும், நானும் இரண்டு வருடங்களாக ஒன்றாக பயணித்திருக்கிறோம்.

இப்படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞர் வாலி எழுதிய அல்லி அர்ஜுனா நாடக பாடலில் மொத்தம் 6 காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த 6 காட்சிகளையும் 6 பாடலாக மாற்றிக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அதுமட்டுமில்லாமல் பா.விஜய் மொத்தம் 4 பாடல்கள் எழுதியுள்ளார். வாங்க மக்கா வாங்க பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.

கவிதையின் ஓட்டத்தோடு இணைந்த பாடல்கள் என்பதால் இப்படத்திற்கு மிகுந்த சிரத்தையோடு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். பழமையான இசைக் கருவிகளை பயன்படுத்தியே இந்த பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பாடகர் ஹரிச்சரண் இப்படத்தில் 7 பாடல்கள் பாடியுள்ளார். வளரும் இளம்பாடகர் ஒருவர் ஒரு படத்திற்கு தொடர்ந்து 7 பாடல்கள் பாடுவது இதுவே முதல்முறை.kaaviya-thalaivan326-600

நாடக நடிகர்களான கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன். சித்தார்த்-வேதிகாவின் கதாபாத்திரங்களில் அவர்களுடைய சாயல் இருந்தாலும், இந்த படம் அவர்களை பற்றிய கதை கிடையாது. இப்படத்தின் பாடல்களை காரைக்குடி, தென்காசி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளோம். இப்படத்தின் பாடல்கள் முதலில் எழுதப்பட்டு அதன்பிறகே மெட்டமைக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான இசை அனுபவமாக இருக்கும்.

இப்படத்துக்காக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று ‘ரோடு ஷோ’ நடத்தி படத்தை விளம்பரப்படுத்தவுள்ளோம். அந்த காலத்தில் நாடகத்தை பார்க்க மக்களை வரவழைக்க எப்படி தெருத் தெருவாக சென்று தண்டோரா அடித்து அவர்களுக்கு தெரியப்படுத்தினார்களோ, அதையே நவீன முறையில் இப்படத்துக்காக செய்யவிருக்கிறோம்.

தொடர்ந்து அழுத்தமான கதைகளை படமாக்குறது ஏன்னு எல்லாரும் கேட்கிறாங்க. ஏன் என்னோட மனைவியே கேட்கிறா. சீக்கிரம் அடிதடி படம் எடுத்து, காசு சம்பாதிச்சி, வீடு வாங்குற வழியை பாருங்கன்னு சொல்றா. எனக்கும் ஜாலியான பக்கா கமர்ஷியல் படம் எடுக்க ஆசைதான். அடுத்த படம் கண்டிப்பா அந்த மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன். இந்த மாதிரி படங்கள் எடுக்கிறது ரொம்பவே ரிஸ்க்கான விஷயம். படம் மக்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதாங்கிற டென்ஷன் இருந்துட்டே இருக்கும். எனக்கும் மன அழுத்தம் அதிகமாகும். அதனால் இனிமே ரூட்டை மாற்ற வேண்டியதுதான்,” என்றார்.

Loading...