அஜித், விஜய் போன்றே சொல்பேச்சு கேட்காத அமலா பால்
அதோ அந்த பறவை போல படத்தில் இயக்குனர் பேச்சை கேட்காமல் நடந்து கொண்டுள்ளார் அமலா பால்.

அதோ அந்த பறவை போல படத்தில் இயக்குனர் பேச்சை கேட்காமல் நடந்து கொண்டுள்ளார் அமலா பால்.
வினோத் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் அதோ அந்த பறவை போல. படம் முழுக்க காட்டில் எடுத்துள்ளனர். ஹீரோயினை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அமலா பாலுக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம் மற்றும் அமலா குறித்து இயக்குனர் வினோத் கூறியதாவது,
அதோ அந்த பறவை படம் கர்நாடகா, கேரள மாநில எல்லைகளை ஒட்டியுள்ள தமிழக காடுகளில் எடுக்கப்பட்டது. முழுப் படமும் காட்டுப் பகுதியில் தான் படமாக்கப்பட்டது. வானிலை மாறும் காட்டுப் பகுதியில் படப்பிடிப்பை நடத்த கடினமாக இருந்தது. இருக்கும் இயற்கை வெளிச்சத்தில் ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் ஷூட் செய்தார்.
ஸ்க்ரிப்ட்டை கூறும்போதே படத்தில் பல சவாலான ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க வேண்டியது இருக்கும் என்பது அமலா பாலுக்கு தெரியும். பைக் ஓட்டுவது, சேசிங் காட்சிகளில் அவர் நடிப்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் பிற ரிஸ்கான ஸ்டண்ட் காட்சிகளில் டூப் வைத்துக் கொள்ளலாம் என்று நான் அமலாவிடம் கூறினேன். ஆனால் டூப் போட அவர் மறுத்துவிட்டார்.(அஜித்தும், விஜய்யும் கூட இப்படித் தான் டூப் மாட மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
எவ்வளவு ரிஸ்கான காட்சியாக இருந்தாலும் நானே தான் நடிப்பேன் என்றார். 80 அடி உயர மரங்களில் இருந்து கீழே இறங்குவது(ஒரே ஷாட்டில்) உள்ளிட்ட காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார். அவரின் அர்ப்பணிப்பு பிரம்மிக்க வைத்தது. ரிஸ்கான காட்சிகளில் கூட எதுவும் கூறாமல் நடித்துக் கொடுத்தார். சிறப்பான ஆக்ஷன் காட்சிகளை கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதோ அந்த பறவை போல என்பது கதையுடன் நேரடி தொடர்புடைய தலைப்பு. எம்.ஜி.ஆரின் அதோ அந்த பறவை போல பாடல் சுதந்திரம், விடுதலையை பற்றியது. இந்த படத்திலும் அதே அர்த்தம் தான். இந்த படத்தில் ஆசிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்று வினோத் தெரிவித்துள்ளார்.