கஜா புயல்... டெல்டா மாவட்டத்துக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

கஜா புயல்... டெல்டா மாவட்டத்துக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி!
சிவக்குமார்

கடந்த 15ம் தேதி நாகை மாவட்டத்தில் கரையை கடந்த கஜா புயலால், அம்மாவட்டமே சீர்குலைந்து கிடக்கிறது. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து, விவசாய பணிகள் பாதிப்படைந்து என டெல்டா மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கியுள்ளது. 

அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தொண்டர்கள், தன்னார்வலர்கள் என பலதரப்பட்டவர்களும் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என தமிழக அரசு முதற்கட்டமாக கணக்கிட்டுள்ளது. 

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர் சிவக்குமாரின் குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து இந்த நிதியுதவியை செய்துள்ளனர். 

தமிழக முதலமைச்சரின் புயல் நிவாரண நிதிக்கு இதனை வழங்காமல், நேரடியாக தன்னார்வலர்கள் மூலம் இந்த நிதியை கொண்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் திரைத்துறையினர் பலரும் இதுபோன்று உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.