தமிழக வெள்ள நிவாரண நிதியாக நடிகர் ரஜினிகாந்த் ரூ 10 கோடி கொடுத்ததாக ஊடகங்களிலும் முன்னணி பத்திரிகைகளிலும் செய்திகள் வலம் வந்தவண்ணம் உள்ளன.

இந்த விஷயத்தில் உண்மை என்ன என்று விசாரித்ததில், ரஜினி ரூ 10 கோடி கொடுத்ததாகச் சொல்லப்படுவது சிலரால் பரப்பப்பட்ட வதந்தி என்று தெரியவந்தது.

உண்மையில் வெள்ள நிவாரணத்துக்கு என்ன கொடுத்தார் ரஜினி?

கடந்த டிசம்பர் 1-ம் தேதி வெள்ள நிவாரண நிதியாக ரூ 10 லட்சத்தை, சென்னையை பெரும் மழை தாக்கியதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார் ரஜினி.

அதன் பிறகு வெள்ளம் தாக்கிய பிறகு, கடந்த ஐந்து தினங்களாக நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் அனுப்பி வைத்து வருகிறார்.

ராகவேந்திரா மண்டபத்திலும், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் அலுவலகத்திலும் வைத்து இந்த நிவாரணப் பொருள்கள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுவரை 50க்கும் அதிகமான லோடு நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளார் ரஜினி என்று தெரியவந்துள்ளது. இதனை அவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா மேற்பார்வை செய்து வருகின்றனர். ரஜினியின் மருமகன் தனுஷும் இதில் பங்கேற்று வருகிறார். ரஜினி ரசிகர் மன்றத்தினருடன் தனுஷ் ரசிகர்களும் இணைந்து இந்த நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கடந்த ஐந்து தினங்களாக நூற்றுக்கணக்கான ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் பாய், போர்வைகள், புதிய உடைகள், பால் பவுடர், சமையல் பொருள்கள், தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்திகள், கொசு விரட்டிகள், வேட்டி, சேலைகள், அரிசி, நூடுல்ஸ், பருப்பு என 25 வகைப் பொருள்களை ராகவேந்திரா மண்டபத்திலிருந்தும், தனுஷ் அலுவலகத்திலிருந்தும் பெற்று விநியோகித்து வருகிறோம். சென்னை நகரம் முழுவதிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருள்களை விநியோகித்துவிட்டோம்.

இப்போது கடலூர், தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுவரை ரூ 5 கோடி மதிப்பிலான பொருள்களை நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகித்துள்ளோம். மேலும் 20 லோடு நிவாரணப் பொருள்கள் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களிலிருந்து வரவிருக்கின்றன,” என்றார்.

முதல்வரிடம் தனது மனைவி மூலம் மேலும் ரூ 10 கோடியை ரஜினி வழங்கியதாக வந்த செய்தி குறித்துக் கேட்டபோது, “உண்மை தெரியாமல் சிலரால் பரப்பப்பட்டு வரும் வதந்தி அது,” என்றார் அவர்.