நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு பணம் திரட்டுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை நடிகர் சங்கம் செய்து வருகிறது. இதில் நட்சத்திர கிரிக்கெட்டும் ஒன்று வருகிற 17–ந் திகதி நடைபெற உள்ளது.

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 48 நடிகர்கள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் கேப்டன்கள் நியமிக்கப்பட்டள்ளனர். கிரிக்கெட் போட்டியின் தூதுவர்களாக முன்னணி நடிகைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போட்டி தொடக்க நாளில் ரஜினி, கமல், உள்பட அனைத்து முன்னணி நடிகர்களும் பங்கேற்கிறார்கள். அஜீத் இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பாரா? மாட்டாரா? என்று பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன.

இதுபற்றி நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணனிடம் கேட்டபோது, “அஜீத் வருவாரா? மாட்டாரா? என்பது அவரது தனிப்பட்ட விஷயம். நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை. நடிகர் சங்கம் நிகழ்ச்சிகள் நடத்தி அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு நல்ல காரியங்களை செய்வது காலம் காலமாக நடக்கும் நிகழ்ச்சி. இப்போது எங்கள் சக கலைஞர்கள் நலனுக்காக இதை நடத்துகிறோம் என்றார்.