மம்முட்டி விடுத்த மை ட்ரீ சவாலை ஏற்று தன் வீட்டில் மரக்கன்று நட்ட நடிகர் சூர்யா, இப்போது அந்த சவாலை நடிகர்கள் ஆமிர்கான், மகேஷ்பாபு மற்றும் சுதீப்புக்கு விடுத்துள்ளார். ஐஸ் பக்கெட் சவால் உலகெங்கும் பிரபலமானதால், அதே போல புதுப் புது சவால்களை பிரபலங்களும் அவர்களின் ரசிகர்களும் உருவாக்கினர். ஹைதராபாதில் ஒருவர் அரிசி பக்கெட் சவாலை உருவாக்கி, பரவ வைத்தார். இதன் மூலம் பல ஏழைகளுக்கு அரிசி கிடைத்தது.

அடுத்து நடிகர் பஹத் பாஸில் மரம் நடும் சவாலை உருவாக்கி, செயலிலும் காட்டினார். அதை பிரபலப்படுத்தியவர் மம்முட்டிதான். தன் வீட்டுத் தோட்டத்தில் மரங்களை நட்டு தண்ணீர் ஊற்றி, அந்தப் படங்களை வெளியிட்டார். இப்போது பூமிக்குத் தேவை இந்த சவால்தான் என்றார்.

மேலும் நடிகர்கள் விஜய், சூர்யா போன்றவர்களுக்கும், அவர்களின் ரசிகர்களுக்கும் இந்த சவாலை விடுத்தார். இதைத் தொடர்ந்து சவாலை ஏற்ற நடிகர் விஜய், சில மரக்கன்றுகளை நட்டு அந்தப் படங்களையும் வெளியிட்டார்.

அடுத்து இப்போது சூர்யா களமிறங்கியுள்ளார். காடுகள், மரங்கள்தான் இப்போது பூமியின் மாசுபாட்டை நீக்க ஒரே வழி என்று கூறியுள்ள சூர்யா, தன் வீட்டில் மரம் நட்டு, தண்ணீர் ஊற்றினார். அந்தப் படங்களையும் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தன் சக நடிகர்களான ஆமிர்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, கன்னட நடிகர் சுதீப் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த மரம் நடும் சவாலை விட்டுள்ளார்.