விக்ரம் தற்போது இருமுகன் படத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் சென்னையில் பெய்த மழையில் மக்கள் வீடு, நிலம் என அனைத்தும் இழந்து கஷ்டத்தில் ஆழ்ந்தனர்.

இதற்கு பலரும் முன் வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர், ஏழை, பணக்காரன் இல்லாமல் செய்த உதவிக்கு ஒரு உதாரணமாக ஒரு வீடியோ ஆல்பம் ஒன்றை விக்ரம் ரெடி செய்துள்ளார்.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடக்க, பாடல் ஆல்பம் நாளை வெளிவரவிருக்கின்றதாம். இதற்காக ஒரு உருக்கமான கடிதம் ஒன்றை விக்ரம் அனுப்பியுள்ளார். இதோ உங்களுக்காக….

உலகம் இதுவரை கண்டிராத பெரு வெள்ளம் சென்னையை சூழ்ந்த அந்த நாட்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிர் வாழ அத்தியாவசிய தேவையான உணவு,குடிக்க தண்ணீர் இது போல எதுவுமே கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டது சென்னை.
சில இடங்களில் உயிரைக் கூட விட்டுவைக்கவில்லை இந்த மழை.
இந்தப் பெரு வெள்ளம் தேங்கிக் கிடந்ததைப் போல,மக்கள் தேங்கவில்லை. மனிதநேயம் உள்ள அனைவரும் வெளியே வந்தார்கள். அவர்களால் முடிந்தவரை அத்துனை பேரையும் வெளியே இழுத்து வந்தார்கள். வெள்ளத்தினைத் தாண்டி,உலகில் இருக்கும் அத்தனை பேரின் கவனத்தினை ஈர்த்தது.
வெள்ளத்திற்கு எதிராக இறங்கி,என் நகரத்தினை மீட்டெடுப்பேன் என சபதமேற்று வந்தவர்கள் அவர்கள்.
சென்னை மக்களுக்கிடையே இருந்த அந்த ஒற்றுமை என்னையும் அவர்களோடு ஏதோ ஒரு வழியில் இணைத்துக் கொள்ளத் தூண்டியது.

உதவும் மனப்பான்மையுடன் இருக்கும் இந்த மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த
இயற்கைப் பேரிடர் தானா? என்ற கேள்வி என்னுள் வந்தது.

எந்தவித வெறுப்பும், தயக்கமுமின்றி, ஒற்றுமையாகக் களமிறங்கிய,அந்த
ஆயிரக்கணக்கான நல்உள்ளங்களை
என் கேள்விக்கு பதிலாக,
நான் பார்த்தேன்.

மனிதநேயத்தின் மீதான மதிப்பு என்னுள் இப்போது இன்னும் அதிகமானது. என்னை நான் இன்னும்சற்று மெருகேற்றிக் கொள்ளக் காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்,
விக்ரம்