தமிழில் ‘கும்கி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இதில் லட்சுமி மேனனின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லட்சுமி மேனனுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.

இவர் நடித்த படங்களான ‘சுந்தர பாண்டியன்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’, ‘கொம்பன்’ ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக அமைந்தன. மேலும் அஜித்துக்கு தங்கையாக ‘வேதாளம்’ படத்தில் நடித்திருந்தார். இப்படமும் சூப்பர் ஹிட்டானது.

மலையாள நடிகையான லட்சுமி மேனன், தமிழில் ஜொலித்த அளவிற்கு மலையாளத்தில் ஜொலிக்க முடியவில்லை. இவர் மலையாளத்தில்தான் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். இவர் நடித்த முதல் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் சரியாக ஓடவில்லை. இதையடுத்து மற்றொரு படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படமும் தோல்வியை தழுவியது. இதன் பிறகுதான் தமிழில் ‘கும்கி’யில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

தமிழில் வெற்றிப் படங்களில் நடித்து வந்த நிலையில், 2014ம் ஆண்டு ‘அவதாரம்’ என்னும் மலையாள படத்தில் நடித்திருக்கிறார். இப்படமாவது வெற்றி பெறும் என்று நம்பிக்கையில் இருந்த லட்சுமி மேனனுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதனால், மலையாளப் படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ‘மிருதன்’ படம் நாளை வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதியுடன் ‘ரெக்கை’ படத்திலும், ஜீவாவுடன் ‘ஜெமினி கணேசன்’ படத்திலும் நடிக்க இருக்கிறார். தமிழில் பிசியாக நடித்து வந்தாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட நல்ல கதையம்சம் உள்ள படம் வந்தால் மலையாளத்தில் மீண்டும் நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Loading...