கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாலேயே மணிரத்னம் படத்திலிருந்து விலகியதாக சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார். ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் புதிய பட வேலையைத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் இப்படத்தில் துல்கரே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. பின்னர் அவருக்குப் பதில் நானி நடிப்பதாகக் கூறப்பட்டது. கடைசியில் கார்த்தி நாயகனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் இப்படத்தின் நாயகி என பலரின் பேர் அடிபட்டது. இறுதியில் பிரேமம் பட புகழ் சாய் பல்லவி தான் நாயகி என உறுதியானது.

தமிழகத்தைச் சேர்ந்த சாய்பல்லவி, மலையாளப் படத்தில் அறிமுகமாகி தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர். இன்றளவும் அவரை மலர் டீச்சர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாகிறார் என்ற சேதி, தமிழ் ரசிகர்களின் காதில் தேனாக பாய்ந்தது. அலைபாயுதே, ஓ காதல் கண்மணி பட வரிசையில் இப்படமும் காதலில் கவிதை பாடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தனது புதிய படத்திற்கு குருதிப் பூக்கள் எனப் பெயரிட்டுள்ளார் மணிரத்னம். இதனால் ரோஜா, பம்பாய், உயிரே போன்ற காதல் கலந்த ஆக்‌ஷன் படமாக இந்தப்படம் இருக்கும் என பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் தான் மணிரத்னம் படத்தில் இருந்து சாய்பல்லவி விலகிவிட்டதாகவும், அவருக்குப் பதில் அதிதி என்ற பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்பதால், கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே சாய் பல்லவி இந்தப் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்பட்டது.

ஆனால், கால்ஷீட் பிரச்சினையில்லை, கதையில் மாற்றம் செய்ததே தன் விலகலுக்குக் காரணம் என விளக்கம் அளித்துள்ளார் சாய்பல்லவி. இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நிறைய வதந்திகள் உலவி வருகின்றன. எனவே நான் தனிப்பட்ட முறையில் அதைத் தெளிவுபடுத்தலாம் என உள்ளேன்.

யாருக்கும் மணி ரத்னம் படத்திலிருந்து வெளியே வர மனசு இருக்காது. எனக்கும் அப்படிதான். புகழ்பெற்ற இயக்குநரான அவருக்கு ஒரு கதாபாத்திரத்துக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று நன்றாகவே தெரியும். அதேபோல என் மீது அக்கறை உள்ளவராக எனக்கும் எது சரியாக இருக்கும் என்பதும் அவர் நன்றாக அறிவார்.

கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர் நல்ல மனதுடன் எனக்குத் தெரிவித்தார். அவருடைய உயரத்துக்கு இதைச் செய்யவேண்டியதில்லைதான். அவருடைய ரசிகராக எல்லோரையும் போல நானும் இந்தப் படத்தில் மிக ஆர்வமாக உள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.