கையில் உள்ள படங்களை முடித்து கொடுத்து விட்டு திருமணம், குடும்பம் என செட்டிலாகப் போகிறார் நடிகை அனுஷ்கா என செய்திகள் வெளியானது.

ஆனால், இத்தகவல்களை பொய்யாக்கும் வகையில் பாலிவுட்டிற்குப் போகப் போகிறாராம் அனுஷ்கா. அமன் கி ஆஷா படத்தை இயக்கிய இயக்குநர் இ நிவாஸ் தான் அனுஷ்காவை இந்தியில் அறிமுகப் படுத்தத் திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கு ஜூவினைல் என பெயரிடப் பட்டுள்ளதாம். இக்கதைக்கு அனுஷ்கா பொருத்தமானவராக இருப்பார் என கருதியதால், அவரை அணுகியதாக இயக்குநர் நிவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு நிவாஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-

இந்த கதையை அனுஷ்காவிற்காகவே தயாரித்துள்ளேன் எனக் கூறலாம். அவரிடம் கதையைச் சொன்னேன். அவருக்குப் பிடித்து விட்டது.

இந்த படத்தின் பணிகள் மிக ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இருப்பினும் அவர் தரப்பில் இருந்து எந்த முடிவும் சொல்லவில்லை.

முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்பதாலேயே அவர் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளோம்.

இம்மாத இறுதியில் அவரின் முடிவு பற்றிய இறுதியான அறிவிப்பு வெளியிடப்படும்.

ஜூவினைல் என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஏராளமான முன்னணி நடிகர்கள் இதில் நடிக்க உள்ளனர். இது புதிய கதை. ரீமேக் கிடையாது.

பெண்களை மையமாகக் கொண்ட கதையும் இல்லை. இந்த படத்தில் நிறைய கதைகள் உள்ளன. அவை அனைத்தும் க்ளைமாக்சில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட உள்ளது என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.