முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பினால் தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டார் நடிகை மியா. இவர், நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்த அமரகாவியம் படத்தின் நாயகி. பள்ளி மாணவியாக காதல் புரியும் காட்சிகளில் துறு துறுப்பைக் காட்டும் மியா, கல்லூரி மாணவியாக பக்குவப்பட்ட நிலையில் நிதானமாகப் பேசும் காட்சிகள் என ஒரே படத்தில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவரான மியா, கோட்டயத்திலுள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வருகிறாராம்.

மியாவின் சொந்தப் பெயர் ஜிமி ஜார்ஜ். இவரது முதல் மலையாளப் படம் ‘சேட் டாயிஸ்’. இப்படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் மியா.

ஜிமி ஜார்ஜ் என்ற பெயரை உச்சரிக்க கஷ்டப்பட்டதால், திரையுலகப் பிரவேசத்திற்காகத் தன் பெயரை மியா என மாற்றிக் கொண்டாராம் இவர்.

முறைப்படி சங்கீதம் கற்ற மியா நன்றாகப் பாடுவாராம். தனது மலையாளப் படங்களுக்கு தானே டப்பிங் பேசிக் கொள்ளும் மியா, தனது உச்சரிப்பில் மலையாள வாடை வீசுவதால் தமிழில் டப்பிங் பேசவில்லையாம்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல ஆக்டிங் ஸ்கோப்புள்ள கேரக்டர் கிடைத்ததால் மியா சந்தோஷத்தில் இருக்கிறாராம். இவர் மலையாளத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஜெயராம், பிருத்விராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தமிழிலும் இதே போன்று பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.

நிறைய படங்கள் பண்றதை விட ஒரு படம் பண்ணினாலும் அது பேசப்படும் விதமா இருக்கணும் என்பது தான் மியாவின் கொள்கையாம். மம்மூட்டி, மோகன்லால், ஷோபனா மற்றும் ரேவதி போன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆசையாம்.

படிப்பு, நடிப்பு இரண்டையும் முடித்த பிறகு தான் திருமணம் பற்றி பேச வேண்டும் என வீட்டில் கறாராக சொல்லி விட்டாராம் மியா. அதனால், தற்போதைக்கு தன் கவனம் காதல் பக்கம் போக வாய்ப்பில்லை என்கிறார் இவர்.

Loading...