நல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பியது என்று தான் அவரின் ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்த பத்மாவதி படத்திற்கு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தீபிகாவின் தலையை வெட்டினால், மூக்கை வெட்டினால் கோடிக் கணக்கில் பரிசு அளிக்கப்படும் என்று எல்லாம் அறிவிப்பு வெளியானது.

பிரச்சனைகளை அடுத்து பத்மாவதி என்ற பெயரை பத்மாவத் என்று மாற்றி படத்தை வெளியிட்டனர். இந்நிலையில் இது குறித்து ஐஸ்வர்யா ராய் பேட்டி அளித்துள்ளார்.

பத்மாவதி படத்தில் ராணி பத்மினியாக நான் தான் நடிப்பதாக இருந்தது. பன்சாலி என்னை தான் முதலில் அணுகினார். ஆனால் அப்போது கில்ஜி கதாபாத்திரத்திற்கு சரியான நடிகர் கிடைக்கவில்லை. அதனால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. நானும், பன்சாலியும் மீண்டும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம். அது எப்பொழுது நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் ஐஸ்வர்யா ராய்.

சல்மான் கான், ஐஸ்வர்யா ராயை வைத்து பத்மாவத் படத்தை எடுக்க விரும்பினாராம் சஞ்சய் லீலா பன்சாலி. ஆனால் காதலர்களாக இருந்த அவர்கள் சண்டை போட்டு பிரிந்ததால் மீண்டும் சேர்ந்து நடிக்க வாய்ப்பே இல்லை என்பதை புரிந்து கொண்ட பன்சாலி தீபிகா மற்றும் ரன்வீர் சிங்கை வைத்து பத்மாவத் படத்தை இயக்கினார்.

முன்னதாக ஹம் தில் தே சுகே சனம் மற்றும் தேவ்தாஸ் ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராயும், பன்சாலியும் சேர்ந்து பணியாற்றினர். அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. ஹம் தில் தே சுகே சனம் படத்தில் ஐஸ்வர்யா, சல்மான் கானின் ஜோடிப்பொருத்தம் வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் பிறகு காதலர்களான அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

அதுல் மஞ்சுரேகர் இயக்கத்தல் ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்த ஃபேனி கான் படம் கடந்த 3ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராய் அடுத்ததாக தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து நடிக்க உள்ளார். 8 ஆண்டுகள் கழித்து அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.