கூகுளில் 2015 ஆம் ஆண்டு முழுக்க என்ன தேடப்பட்டுள்ளது என்பதை பகுப்பாய்வு செய்து கூகுள் டிரெண்ட் பட்டியல் செய்ததில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை கூகுள் தனிப்பக்கமாக வெளியிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு முடிவடைய சில நாட்களே உள்ள நிலையில், கடந்த நாட்களை நினைவுப்படுத்தும் விதமாக, இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட சொற்களை கூகுள் வலைதளம் பட்டியலிட்டுள்ளது.

இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் சன்னி லியோன் என்ற நடிகை முதல் இடம் பெற்றுள்ளார். அடுத்ததாக நடிகர் சல்மான் கானும், மூன்றாவதாக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமும் இடம்பெற்றுள்ளனர். இந்த வரிசையில் 10வது இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றிருக்கிறார்.

அதிகம் தேடப்பட்ட வார்த்தை பட்டியலில் முதலாவதாக இருப்பது ஃப்ளிப்கார்ட் ஆகும், அடுத்தப்படியாக முறையே ஐஆர்சிடிசி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அமேசான், ஸ்நாப்டீல் ஆகும். அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்களில் பாகுபலி முதலிடத்திலும் அடுத்ததாக பஜ்ரங்கி பைஜான், தமிழ் திரைப்படங்களில் ஐ 5வது இடமும், புலி 7வது இடத்திலும் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு அதிகம் தேடபட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் வீராட் கோலி இருக்கிறார் அடுத்தப்படியாக அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி இடம் பெற்று உள்ளார். மேலும் சச்சின் தெண்டுல்கர் 3வது இடத்திலும், மகேந்திர சிங் டோனி 4வது இடத்திலும் இருக்கறார்.