தீபிகா படுகோனே போன்று ஒரு நிலையை எடுக்க அனைவருக்கும் துணிவு வந்துவிடாது என்று ஹேப்பி நியூ இயர் இசை வெளியீட்டு விழாவில் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, போமன் இரானி, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஹேப்பி நியூ இயர். தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

விழாவில் பேசிய ஷாருக்கான் பிரபல ஆங்கில நாளிதழ் தனது கிளீவேஜ் பற்றி செய்தி வெளியிட்டதற்கு தீபிகா தக்க பதிலடி கொடுத்ததை பாராட்டினார்.

ஒரு விஷயத்தில் தனது நிலையை வெளிப்படையாக தெரிவிக்கும் துணிவு அனைவருக்கும் வந்துவிடாது. அந்த துணிவு தீபிகாவுக்கு உள்ளது என்றார் ஷாருக்.

இந்த நிகழ்ச்சியில் பல பெண்கள் கலந்து கொண்டிருப்பதால் அந்த விஷயம் குறித்து பேச வேண்டாம். தீபிகா என்ன ட்வீட் செய்திருந்தாலும் அதை நானும், ஹேப்பி நியூ இயர் படக்குழுவும் ஆதரிக்கிறது என்று கூறினார் ஷாருக்கான்.

நான் என்ன கூற வேண்டும் என்று விரும்பினேனோ அதை தெரிவித்துவிட்டேன். இனிமேல் இது குறித்து பிரச்சனை வராது என்று நம்புகிறேன் என தீபிகா தெரிவித்தார்.

ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ் படங்களை அடுத்து ஷாருக்கானும், தீபிகாவும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ஹேப்பி நியூ இயர்.

தீபிகா ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படம் மூலம் தான் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். ஷாருக்கும், அவரும் ஜோடி சேர்ந்த 2 படங்களும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் ஹேப்பி நியூ இயரும் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.