‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்டு ஸ்டோரி’, ‘மெஷின்’ உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்தவர் கியாரா அத்வானி. தற்போது தெலுங்கில் கொரட்டல்லா சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் ‘பாரத் அனே நேனு’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் கமிட்டானதில் இருந்தே சில முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்தார் கியாரா. அவரது முயற்சியின் பலனாக தற்போது ‘ரங்கஸ்தலம்’ படத்தை அடுத்து ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை கைப்பற்றியிருக்கிறார்.

போயாபதி ஸ்ரீனு இயக்கும் இந்தப் படத்தில் அனு இமானுவேல் தான் முதன்மை நாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் மகேஷ்பாபு படத்தில் கியாரா அத்வானி நடித்து வருவதால் ராம்சரண் படத்தில் அவரை முதன்மை நாயகியாக்கி விட்டு, அனு இமானுவேலை இரண்டாவது நாயகியாக்கி விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார் அனு இம்மானுவேல். ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்த அனு இமானுவேல், பவண் கல்யாணுடன் ‘அஞ்ஞாதவாசி’ படத்தில் நடித்திருக்கிறார். ‘நா பேரு சூர்யா’, ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.