சர்கார் மற்றும் பேட்ட பட நிகழ்ச்சிகளை ஒரே சமயத்தில் நடத்தி, ரஜினி மற்றும் விஜயை ஒரே மேடையில் பங்கேற்க வைக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்களைத் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

ஏற்கனவே சர்கார் படம் பற்றி சில அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் தலைப்பு பேட்ட என்பதை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கூடவே பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த போஸ்டரை லட்சக்கணக்கானவர்கள் பார்த்தனர். இதனால் பேட்ட இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.

இந்நிலையில், அடுத்த மாதம் 2ம் தேதி சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் பேட்ட படத்தின் டீசரும் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டு முன்னணி நடிகர்களின் பட அப்டேட் என்பதால் இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்த சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் அந்த விழாவில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் விஜய் ஆகியோரை ஒரே மேடையில் அமர வைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

இது நடைபெற்றால் இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் என மிகப்பெரிய கூட்டம் வருவது உறுதி. அதோடு இந்நிகழ்ச்சியை சன் டிவியில் ஒளிபரப்பு செய்தால் டிஆர்பியும் எகிறும் என்பது அவர்களது கணிப்பு. ஒரே கல்லுல.. சாரி, ஒரே மேடையில் பல மாங்காய்களை அடிக்கப் பார்க்கிறது சன் பிக்சர்ஸ்.