போஸ்டரில் இருப்பது போல் தெறி படத்தில் மூன்று கேரக்டரில் விஜய் நடிக்க இருக்கிறாரா என்பது குறித்து அப்பட இயக்குநர் அட்லி விளக்கமளித்துள்ளார்.

ராஜாராணி படம் மூலம் ரசிகர்களின் மனதில் குறிப்பிடத்தக்க இயக்குநராக இடம் பிடித்தவர் அட்லி. இவர் தற்போது விஜயை வைத்து இயக்கி வரும் படத்திற்கு தெறி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில், மூன்று வித வேறுபட்ட கெட்டப்புகளில் விஜய் இருப்பது போன்று டிசைன் செய்யப்பட்டிருந்தது.

போஸ்டரே தெறிக்க விடுவது போல் பரபரப்பைக் கிளப்பியது. போஸ்டரில் காணப்பட்ட அதே ஸ்பார்க் படத்திலும் இருக்கும் என அட்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் விஜய் உணர்வுப்பூர்வமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம். விஜயை பார்த்தால் யாரோ ஒரு போலீஸ் போன்ற உணர்வு இருக்காதாம். நமது குடும்பத்தில் ஒருவர் என உணரும் வகையில் இருக்குமாம்.

இப்படத்தில் விஜய் போலீசாக நடிக்கிறார் என்பது போஸ்டரைப் பார்த்தாலே தெரிகிறது. ஆனால், மூன்று வித கெட்டப்புகளில் தோன்றுகிறாரா, அல்லது மூன்று தனிப்பட்ட கேரக்டர்களில் நடிக்கிறாரா என்பதை சொல்ல மறுக்கிறார் அட்லி.

‘எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட்டால் படம் எப்படி சுவாரஸ்யமாக இருக்கும். அதற்கான சர்ப்ரைஸ் படத்தில் வைத்திருக்கிறேன்” என்கிறார் அவர்.

அதோடு, இப்படத்திம் இரண்டு நாயகிகளான எமி ஜாக்சனும், சமந்தாவும் கிளாமருக்காக என மட்டுமில்லாமல், கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் கருவியாக பயன்படுத்தப் பட்டுள்ளார்களாம். எது எப்படியோ.. பொங்கலுக்குத் தெரிந்து விடப் போகிறது.. எஸ்..பாஸ். பொங்கலுக்குத்தான் படம் திரைக்கு வருகிறது!