ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, மனோபாலா, சுமன், சரவணன், சிங்கம்புலி மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சவுகார்பேட்டை. “சவுகார்பேட்டை படத்திற்கும், பெயருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் தான் இப்படத்திற்கு சவுகார்பேட்டை என்ற தலைப்பை இயக்குநர் வைத்திருக்கிறோம். இந்தப் படத்தில் நான் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன்.
பேய், மந்திரவாதி என்று 2 விதமான வேடங்களில் இப்படத்தில் நடித்தது ஒரு புதுவித அனுபவத்தை அளித்தது. இரண்டு கதாபாத்திரங்களும் மோதும் சண்டைக் காட்சிகளும் படத்தில் இருக்கிறது. ஒருவர் இருப்பது போன்று கற்பனை செய்துகொண்டு நடிப்பது கொஞ்சம் கடினமாகவே இருந்தது.
இந்த படத்தில் ராய் லட்சுமி எனக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தில் அவரும் ஒரு பேயாகத் தான் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது தனக்கு ஒரு கவர்ச்சிப்பாட்டு வேண்டும் என்று ராய் லட்சுமி அடம்பிடிக்க, பதிலுக்கு இயக்குநர் மறுத்து விட்டார்.
உண்மையான காதல் ஜெயிக்கும். அனைத்திலும் உயர்ந்தது கடவுள் சக்தி என்பதுதான் படத்தின் கதை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் சிலங்கா என்ற பெயரில் வெளியாகிறது”. இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவான நம்பியார் 2 வருடங்களுக்கும் மேல் வெளியாகாமல் இருக்கும் நிலையில் சவுகார்பேட்டை தனக்கு கைகொடுக்கும் என்பது ஸ்ரீகாந்த்தின் நம்பிக்கையாக உள்ளது.