ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கும் ‘தெறி’ படத்துடன் ‘கபாலி’ படத்தின் டீஸரை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘தெறி’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதி இப்படத்தை வெளியிடும் முனைப்பில் வியாபாரத்தையும் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தையும் தயாரித்திருக்கிறார் தாணு. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கிறது. எடிட்டிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீஸரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் எடிட்டர் ப்ரவீன்.

‘தெறி’ படத்துடன் ‘கபாலி’ டீஸரை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் தாணு. ‘தெறி’ படம் வெளியான உடன் ‘கபாலி’ படத்திற்கான வியாபாரத்தை தொடங்க இருக்கிறார்கள்.