அஜீத் ரசிகர்களுக்கு நிச்சயம் இது ஒரு ஷாக் நியூஸ்தான்… ஆமாம்.. தல படம் வரும்.. பொங்கலை உற்சாகமா கொண்டாடலாம் என்று நினைத்து, போஸ்டர் பேனரெல்லாம் தயார் செய்தவர்களுக்கு, திடீரென படம் பொங்கலுக்கு வருவது சந்தேகம் என்று குண்டைத் தூக்கிப் போட்டால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் இருக்கிறது படத்தின் இயக்குநர் கவுதம் மேனன் தரப்பிலிருந்து வரும் தகவல்கள்.

சில தினங்களுக்கு முன்புதான் என்னை அறிந்தால் பொங்கல் ரிலீஸ் என்று விளம்பரங்கள் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து நாளிதழ்களில் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, படத்தை வரவேற்க அஜீத்தின் ரசிகர்கள் பரபரப்பாக தயாராக ஆரம்பித்தனர். ஆங்காங்க என்னை அறிந்தால் பேனர்கள், போஸ்டர்கள் முளைத்தன. சிறப்புக் காட்சிகளுக்கு இப்போதிலிருந்தே ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வருவது சந்தேகம்தான் என்று ஒரு தகவல் வெளியாக ஆரம்பித்துள்ளது.

25-1416898003-ajith-kumar-gautham-meno434-6900

இந்தத் தகவலை பரப்புவது கவுதம் மேனன்தான். காரணம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்கள் நடக்க வேண்டியுள்ளதாம். அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேறு பாக்கியுள்ளதாம். இவற்றை முடிக்கவே டிசம்பர் இறுதி வரை ஆகிவிடும் என்கிறார்கள். எனவே பொங்கலுக்கு அஜீத் படம் வருவது சந்தேகம் என்பது கவுதம் தரப்பு விளக்கம்.

ஆனால் பொங்கலுக்கு இந்தப் படத்தைக் கொண்டு வந்து வசூலை அள்ள வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் உறுதியாக உள்ளார். எனவே டிசம்பர் இறுதியில் படத்தை முடித்தாலும், அடுத்த பத்து நாட்களில் ரிலீஸ் செய்வதில் பிரச்சினை இல்லை என்று அவர் கூறி வருகிறாராம்.

அதனால்தானே அடுத்த படத்துக்கும் ஏஎம் ரத்னமே தயாரிப்பாளராக இருக்கட்டும் என்கிறார் அஜீத்!!