என்னால் விஜய்யை சக நடிகராக எப்பொழுதுமே பார்க்க முடியாது கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். நாக் அஷ்வின் இயக்கியுள்ள படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்துள்ளார்.

இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

மகாநதி படத்தில் நடிக்கத் துவங்கியபோது மேக்கப் போட மட்டும் மூன்றரை மணிநேரம் ஆகும். அதன் பிறகு அத்தனை மணிநேரமாக மேக்கப் போடுவது எனக்கு பெரிதாக தெரியவில்லை.

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. அதே சமயம் அவ்வளவு பெரிய நடிகையை போன்று நடிப்பதில் பயமும் இருந்தது. இந்த படத்தில் நடித்ததில் எனக்கு பெருமையாக உள்ளது.

சாவித்ரியின் மகளிடம் பேசினேன். அவர் தனது தாயின் மேனரிசம் உள்ளிட்டவை பற்றி என்னிடம் கூறினார். எனக்கும் சாவித்ரிக்கும் இடையே நிறைய ஒற்றுமை இருப்பதை புரிந்து கொண்டேன்.

சாவித்ரி நீச்சலடிப்பாராம். எனக்கும் நீச்சல் என்றால் ரொம்ப பிடிக்கும். நாங்கள் இருவரும் டீ பிரியர்கள். அவர் கிரிக்கெட் விளையாடியுள்ளார். நானும் பள்ளியில் படித்தபோது கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவருக்கு கார் ஓட்ட பிடிக்குமாம், எனக்கும் தான். இப்படி எனக்கும் அவருக்கும் இடையே நிறைய ஒற்றுமை உள்ளது.

மீண்டும் விஜய் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அவரை சக நடிகராக என்னால் எப்பொழுதுமே பார்க்க முடியாது. எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகை தருணங்கள் என்றே கருதுவேன் என்றார் கீர்த்தி சுரேஷ்.