கண்ணே கலைமானே திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வந்து ஓகேஓகே படம் மூலம் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் மனிதன் படத்திற்கு பிறகு வெற்றிக்காக போராடி வரும் இவர் சீனுராமசாமியுடன் இணைந்துள்ளார்.

Feb 22, 2019 - 09:18
 0
கண்ணே கலைமானே திரைவிமர்சனம்
கண்ணே கலைமானே திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வந்து ஓகேஓகே படம் மூலம் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் மனிதன் படத்திற்கு பிறகு வெற்றிக்காக போராடி வரும் இவர் சீனுராமசாமியுடன் இணைந்துள்ளார்.

தர்மதுரை வெற்றிக்கு பிறகு சீனு ராமசாமி இயக்கியுள்ள இப்படம் அவருக்கு கைகொடுத்ததா பார்க்கலாம்.

கதைக்களம்

மதுரை அருகேயுள்ள சோழவந்தானில் உதயநிதி ஸ்டாலின் (கமலக்கண்ணன்) இயற்கை விவசாய உரம் தயாரித்து வருகிறார். அந்த ஊருக்கு வங்கி அதிகாரியாக வரும் தமன்னா (பாரதி) அங்குள்ள விவசாய கடன் வாங்கி கட்டாத பட்டியலில் உதயநிதி முதல் ஆளாக இருப்பதை கண்டு அவரை சந்திக்கிறார்.

மோதலில் ஆரம்பிக்கும் இவரது சந்திப்புக்கு பிறகு உதயநிதி மற்றவர்களுக்காக லோன் வாங்கி கொடுத்ததை அறிந்ததும் பின் காதல் பிறக்கிறது.

உதயநிதியின் பாட்டி வடிவுக்கரசி தமன்னா குடும்பத்தை சந்திக்கிறார். அங்கு அவர்கள் குடும்ப சூழ்நிலையை கருதி திருமணத்துக்கு மறுக்கிறார்.

உதயநிதி பட்டினி கிடந்து பாட்டியின் மனதை மாற்றி தமன்னாவை திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்து மறுநாளே தமன்னா வேலைக்கு செல்வதைக்கண்டு வடிவுக்கரசி திட்டவும் உதயநிதி அப்பா 'பூ'ராம் அன்றே தனிக்குடித்தனம் வைக்கிறார்.

பின்னர் அவர்கள் வாழ்க்கையில் ஒரு சம்பவம் அரங்கேறுகிறது. அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதுதான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

படம் முழுவதும் உதயநிதி, தமன்னாவை சுற்றித்தான் இருக்கிறது. ஆனால் படத்தில் கடைசிவரை என்ன இயக்குனர் சொல்ல முயற்சித்தார் என்பது தான் தெரியவில்லை.

படத்தில் இடைவேளை வரை என்ன கதை என்று ஏங்கியவர்களுக்கு இரண்டாம் பாதியிலாவது இருக்கும் என்று எதிர்பார்த்தால் அங்கும் ஏமாற்றம் தான். கடைசி 20 நிமிடத்தில் சின்ன டிவிஸ்ட் அதுவும் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தவில்லை.

படம் முழுவதும் சினிமாத்தனத்தை முடிந்தவரை இயக்குனர் தவிர்த்திருக்கிறார். ஆனால் நீர்பறவை, தர்மதுரை போன்ற படத்தை எடுத்த சீனு ராமசாமி படமா என்று யோசிக்கவைக்கிறது.

படத்தில் எந்த இடத்திலும் ஏற்றஇறக்கமேயில்லை. உதயநிதி எதார்த்தமாக நடித்துள்ளார். நிமிர் படம் பார்த்தவர்களுக்கு மீண்டும் அதையே பார்த்தது போன்றுதான் இருக்கும்.

தமன்னா கமெர்ஷியல் படங்களில் நடித்தாலும் ஏற்கனவே கல்லூரி, தர்மதுரை போன்ற படங்களிலும் நடித்தது போன்று இதிலும் நடித்துள்ளார்.

அங்கங்கே விவசாயிகள் தற்கொலை, நீட் தேர்வு, முதியோர் இல்லம் போன்ற சமூகக்கருத்துக்களையும் நடுவில் பேசியுள்ளார்கள்.

வடிவுக்கரசி பாட்டியாக சிறப்பாக நடித்துள்ளார். அதிகம் பேசாத பொறுப்பான அப்பாவாக 'பூ'ராம் நடித்துள்ளார். உதயநிதி தோழியாக வசுந்தரா நடித்துள்ளார்.

நண்பர்களாக வரும் தீப்பட்டி கணேசன், அம்பானி ஷங்கர் அவ்வப்போது ஒரிரு வசனங்கள் பேசி சிரிக்க வைத்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை நன்றாக உள்ளது. ஒரு பாடல் தவிர பாடல்கள் மனதில் நிற்கவில்லை. ஒளிப்பதிவு சிறப்பாகவே உள்ளது.

க்ளாப்ஸ்

படத்தில் சினிமாத்தனம் இல்லாமல் வரும் எதார்த்தமான காட்சிகள். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ரசிக்கவைக்கிறது.

மனைவியை எந்த சூழ்நிலையில் விட்டுக்கொடுக்காமல் பாசத்தோடு கணவன் பார்த்துக்கொள்ளும் காட்சிகள்

பல்ப்ஸ்

கமர்ஷியல் சினிமாத்தனம் இருக்கக்கூடாது என்பதற்காக ஏற்ற இறக்கமே இல்லாமல் திரைக்கதை. ஒரு கட்டத்தில் சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை தரும் காட்சிகள்.

படம் முடிந்தும் படத்தில் என்ன சொல்ல முயற்சித்தார்கள் என்று புரியாத கதை.

மொத்தத்தில் மூன்றாம் பிறை பாடலில் பாடலில் வரும் பாசம் மட்டுமே கடைசியில் மனதில் நிற்கும் (கண்)ணே கலைமானே.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor