தனுஷ் தன் திரைப்பயணத்தில் மிக மோசமான நிலையில் இருந்த போது அவரை தூக்கிவிட்ட படம் விஐபி.

ஒட்டு மொத்த இன்ஜினியரிங் மாணவர்களின் ஆதரவுடன் செம்ம ஹிட் அடிக்க, தற்போது விஐபி-2வில் மீண்டும் இறங்கி அடிக்க தனுஷ் களம் இறங்கியுள்ளார், தனுஷ் இறங்கி அடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

விஐபி தனுஷ் திரைப்பயணத்தில் பிரமாண்ட வெற்றி. சிம்பிள் கதை, பண பலம் உள்ளவன் நினைத்தால் எதையும் செய்யலாம். ஆனால், இளைஞர் சக்தி அதை விட பெரியது என்று காட்டியிருப்பார்கள்.

அதே டெம்ப்ளைட் தான், என்ன இதில் கொஞ்சம் அதிக பட்ஜெட் அவ்வளவு தான், கஜோல் என்ற எல்லோரும் தெரிந்த முகம்.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரும் Construction வைத்திருப்பவர் கஜோல். அவர் construction எடுக்கும் புராஜக்டில் தனுஷும் உள்ளே வர, பிறகு இவர்களுக்குள் நடக்கும் கிளாஷ் தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

தனுஷ் என்ற ஒரு தனி ஆள் தான் மொத்த படத்தையும் தோளில் சுமக்கின்றார். தண்ணி அடித்துவிட்டு மனைவியிடம் திட்டு வாங்குவது, அதற்கு அப்பா ஆறுதல் சொல்வது என நடுத்தர இளைஞரை கண்முன் கொண்டு வந்துள்ளார், ஆனால், விஐபி-1 விட கொஞ்சம் ஓவர் ஆக்டிங் சார்.

கஜோல் எத்தனை வருடம் கழித்து நடிக்க வந்தாலும், அந்த கிரேஸ் குறையவே இல்லை. ஆனால், அவருக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை என்பதே நிஜம்(கஜோலை விட எடுபிடியாக வரும் ரைஸாவிற்கு விசில் சத்தம் அதிகம் பறந்தது வேறுக்கதை). மேலும், முந்தைய பாகத்தில் வந்த சுரபிக்கு பதிலாக (சீரியலில் இவருக்கு பதிலாக இவர் என்று வருவது போல்) ரிது வர்மா வருகின்றார்.

விஐபி-1 மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் படத்தில் உள்ள யதார்த்தம் தான், அந்த யதார்த்தம் இதில் கொஞ்சம் மிஸ் ஆனதோ என யோசிக்க தோன்றுகின்றது. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனராக இப்படத்தில் வெற்றி பெற்றுவிட்டார், இருந்தாலும், இன்னும் கொஞ்சம் அழுத்தமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

இதற்கு முக்கிய காரணம் கஜோல் போல் ஒரு நடிகையின் பெயரையும் டேமேஜ் செய்யக்கூடாது. அதே நேரத்தில் தனுஷையும் மாஸாக காட்ட வேண்டும் என்பதில் கொஞ்சம் சறுக்கிவிட்டார்.

ஷான் ரோல்டன் என்ன தான் பாடல்கள், இசை என அடித்து நொறுக்கினாலும், இரண்டு செகண்ட் வரும் அனிருத்தின் பிஜிஎம் தியேட்டரே அதிர்கின்றது. அனிருத்தை கண்டிப்பாக விஐபி-2 மிஸ் செய்கின்றது.

க்ளாப்ஸ்

தனுஷின் யதார்த்த நடிப்பு, படத்தின் முதல் பாதி, சரண்யாவை பயன்படுத்திய விதம், முதல் பாதியில் இருக்கும் சில விஷயங்களை இரண்டாம் பாதியில் சரியாக அமைத்த தருணம் என அனைத்தும் ரசிக்க வைக்கின்றது.

விவேக் அவர்களின் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

பல்ப்ஸ்

வலுவில்லாத கதைக்களம், கஜோல் எதிர்ப்பார்த்த அளவிற்கு மிரட்டவில்லை, கிளைமேக்ஸில் தனுஷ்-கஜோல் வரும் இடம் காமெடியாக இருந்தாலும், கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

மொத்தத்தில் விஐபி என்ற ப்ராண்டே விஐபி-2வையும் காப்பாற்றுகின்றது.

Loading...