இப்போது இளம் ஹீரோக்கள் பலர் கதாநாயகர்களாக படையெடுத்து வருவது தொடர்கிறது. இதற்கிடையில் பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் படைவீரன் மூலம் ஹீரோவாக படையெடுத்திருக்கிறார்.

படை வீரானாக அவர் எதை நோக்கி படைஎடுக்கிறார் என பார்க்கலாம்.

கதைக்களம்

அழகான அய்யனார்பட்டி கிராமம். வறட்சியல்லாமல் இருக்கும் நல்ல பூமி. வாழ்வாங்கு வாழும் மனிதர்கள். ஆனால் மனிதர்கள் மனமோ வறண்டு கிடக்கிறது. அம்மக்களுக்கிடையில் ஒரு எளிமையான குடும்பத்தில் இருக்கிறார் நம்ம ஹீரோ விஜய்.

கிராமத்து இளைஞர் அதிலும் ஊரில் முக்கிய ஆள் என்றால் சொல்லவா வேண்டும். தன் நண்பர்களுடன் ஆடல், பாடல் கொண்டாட்டம் தான். வேலையில்லாமல் ஜாலியாக பொழுதை போக்கி வரும் இவருக்கு திடீரென போலிஸ் ஆகவேண்டும் என்ற ஆசை வருகிறது.

எப்படியோ அதற்கான முயற்சிகள் எடுத்து உள்ளே நுழைய நடப்பதோ வேறு. ஒரு பக்கம் உறவினர் முறையான ஹீரோயினை சகஜமாக வம்பிழுத்து விளையாட அடுத்து எதிர்பாராத விதமாக காதலாய் பற்றுகிறது. ஆனால் ஒரு விசயத்தால் இதுவும் கேள்விக்குறி தான்.

இதற்கிடையில் பக்கத்து ஊர்கார்களுடன் இவர்களுக்கு சிறு பகைமை உணர்வு இருந்து வருகிறது. திடீரென ஒரு விசயத்தால் ஒருநாள் கலவரம். நல்லதற்காக ஒரு விசயத்தை செய்ய அவரது உயிருக்கே ஆபத்து வருகிறது.

சாதிய கலவரம் தலைவிரிக்க ஊர்கார்களுக்கு உறுதுணையாய் இருந்தாரா? இல்லை பொறுப்பான போலிஸாக கடமையாற்றினாரா? காதல் கை கூடியதா என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் யேசுதாஸ் ஒரு பிரபலமான பாடகர். முன்பே மாரி படத்தில் போலிஸாக ஒரு கேரக்டர் ரோல் செய்திருப்பார். இப்படத்தில் ஒரு முழு ஹீரோவாக இறங்கியுள்ளார்.

அவரின் முயற்சியை பாராட்டலாம். போலிஸ்கான வேடத்தை ஏற்று பொறுப்பாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். மலையாளம் பின்னணியாக இருந்தாலும் கிராமத்து தமிழை எளிமையாக பேசுகிறார்.

ஹீரோயின் அம்ரிதா புதுமுகம் தான். ஆனால் கதாபாத்திரத்தோடு பொருந்தி போகிறார். அவருக்கு இனி வாய்ப்புகள் கிடைக்கலாம். கடைசியில் ஒரு விசயத்துக்காக காதலனுக்கு கைகொடுப்பது இயல்பாக இருந்தது.

பாரதி ராஜா இப்படத்தில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தன் மருமகனை போலிஸ் ஆக்கும் முயற்சி எடுப்பதோடு ஒரு விசயத்திற்காக போராடுகிறார். இவரின் பங்கு படத்திற்கு நிறைவு.

அதிலும் சாதிய மனங்களால் மனித சாதி சாகடிக்கப்படுவதை தன் பிரபலமான குரலால் அழுத்தி சொல்லியிப்பார் பாருங்கள். ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும்.

ஆரம்பத்தில் கொலை செய்யப்பட்ட ஒரு இளைஞர் எதற்காக இறந்தார் என கேள்வி எழுப்ப, ஒவ்வொன்றையும் தெளிவாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர்.

மூட சாத்திரங்கள் முகம் காணாமல் போனாலும், எங்கோ ஓர் மூலையில் இன்னும் மூளையற்ற சாதியமனிதர்கள் மூர்க்கதனமாக செயல்படுவதை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

சிங்கம் புலி ஒரு சில காட்சிகள் காமெடிக்கு வந்து போனாலும் சில தவறான போலிஸ் மீது இருக்கும் அதிருப்தியை தன் காமெடி பஞ்ச்களால் சிரிப்பு மூட்டுகிறார்.

கிளாப்ஸ்

விஜய் யேசுதாஸ் தன் குரலால் அழகாக பாடி உணர்வு கூட்டியது படத்திற்கு கூடுதல் பலம்.

தனுஷ் பாடிய பாடலுக்கு கூட நல்ல நடன அமைப்பு.

பாரதி ராஜாவின் பளிச் டையலாக்குகள் உள்ளுக்குள் கேள்வி கேட்கும்.

கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை காட்சிகளை மனதில் நிறுத்துகிறது.

பல்பஸ்

ஹீரோவுக்கு இன்னும் கொஞ்சம் இயல்பான தமிழ் இருந்தால் நன்றாக இருக்கும்.

முதல் பாகத்தை இன்னும் பிளான் செய்திருக்கலாம் என தோன்றுகிறது.

மொத்தத்தில் படைவீரன் ஒரு சாதியத்திற்கு சாட்டையடி கொடுத்திருக்கும் சாமானியம்.

Loading...