படங்களில் பல வகை உண்டு அது நாம் அறிந்ததே ஆனால் பேய் படங்களில் எத்தனை வகை உண்டு என நம் தமிழ் திரை உலகிற்கு மட்டும்தான் தெரியும் போலும், அதுபோல் ஒரு வித்தியாசமான (ஆனால் சமீபத்தில் பார்த்து ஏமாந்த அதே) பேய் படம் தான் ஓம் சாந்தி ஓம்!

கதை:

பிறவி என்னும் தூண்டில் முள்ளில்..” பாடல் நியாபகம் இருக்கிறதா? அப்பாடலையே ஒரு முழு படமாக எடுத்தால் அதுதான் இந்த ஓம் சாந்தி ஓம். (ஆனால் இப்படம் 3 ஆண்டுகளுக்கு முன்னரே படப்பிடிப்பை துவங்கிவிட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது!)

ஒரு விபத்துக்கு பிறகு நாயகன் ஸ்ரீகாந்த்தின் கண்ணுக்கு மட்டும் தெரியும் ஆவிகளின் கடைசி ஆசையை எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதைச்சுருக்கம்.

படத்தை பற்றிய அலசல்:

நாயகன் ஸ்ரீகாந்த், வில்லன் ஆடுகளம் நரேன் இவர்கள் எவ்வாறு நடிப்பார்கள் என்று நமக்கு தெரியுமோ அந்த அளவு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் மற்றபடி பெரிதாக ஒன்றும் இல்லை.

நாயகி நீலமிற்கு வெறும் கதாநாயகி வேஷம். மொட்டை ராஜேந்திரனின் குறும்புகள் இப்படத்திலும் ரசிக்கவைக்கின்றது. வழக்கமான பேய்படங்களில் வரும் எந்த திகில் காட்சிகளும் கிடையாது, திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை.

ஸ்ரீகாந்த்திடம் உதவி கேட்பது ஆவிகள் என படம் பார்க்கும் அனைவருக்கும் தெரிந்தால்கூட ஸ்ரீகாந்திற்கு தெரியாதாம், இது படத்தில் வரும் லாஜிக் மீறல்களில் ஒன்று.

இப்படம்”மாசு”விற்கு முன்னரே வெளியாயிருந்தால் கூடவித்தியாசமான கதைக்களம் என்றாவது கூறியிருக்கலாம். பாடல்கள் சுமாராக இருந்தாலும் படத்தின் பாதி நேரத்தை நாம் பாடல்கள் பார்ப்பதிலேயே களிக்க வேண்டியுள்ளது சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஆனால் போலி மருந்துகளால் ஏற்படுத்தும் விளைவுகள், மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் மாணவ தரகர்களை பற்றி பேசியது பாராட்ட வைக்கிறது. பாஸ்கரின் ஒளிப்பதிவு படத்தின் பலம் குறிப்பாக க்ளைமேக்ஸில் வரும் பேருந்து விபத்துக்காட்சியில் “க்ளாஸ்”. விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு பல பிழைகளை மறைக்க உதவியுள்ளது.

க்ளாப்ஸ்:

படத்தின் ஒளிப்பதிவு, ராஜேந்திரனின் குறும்புகள், சில சமூக பிரச்சனையை வெளிக்காட்டியது.

பல்ப்ஸ்:

பலவீனமான மற்றும் முன்கூட்டியே கனிக்க முடியும் அளவிற்க்கு அமைக்கப்பட்ட திரைக்கதை, ஒட்டுதலே இல்லாமல் வரும் பார்த்து பழகிய பழைய காட்சிகள் இதனால் படத்தின் ஓட்டம் தடுமாறியது!