உப்பு கருவாடு

மொழி, அபியும் நானும், பயணம் என தரமான படங்களை நமக்கு தொடர்ந்து அளித்துக்கொண்டு வருபவர் ராதாமோகன். கௌரவம் படத்தின் தோல்வி இவரின் திரைப்பயணத்தை கொஞ்சம் சறுக்கலை ஏற்படுத்தியது.

ஆனால், மீண்டும் தன் அழகிய தீயே ஸ்டைலில் கருணாகரன், நந்திதா என இளம் நடிகர், நடிகைகள் கூட்டத்தோடு ராதாமோகன்களம் கண்டுள்ள படம் தான் உப்பு கருவாடு.

கதைக்களம்

படத்திற்குள் படம் என்பதன் திரைக்கதை பாணியை மெட்டாஎன்பார்கள். இதை வைத்து பல படங்கள் வந்திருந்தாலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்றால் அது பார்த்திபனின் ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் தான்

அந்த வகையில் தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும்ராதாமோகன் தொட்டுள்ள மெட்டா தான் உப்பு கருவாடு.

சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் இருக்கிறார் கருணாகரன்.மயில் சாமி உதவியுடன் மீன் வியாபாரி எம்.எஸ்.பாஸ்கர் தயாரிப்பில் படம் இயக்க கருணாவிற்கு வாய்ப்பு வருகிறது.

ஆனால், இதற்கு அவரின் மகள் நந்திதாவை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என உத்தரவு போட, வேறு வழியில்லாமல் படத்தை இயக்க சம்மதிக்கிறார். சுட்டு போட்டாலும் நந்திதாவிற்கு நடிப்பு வரவில்லை, இருந்தாலும் எப்படியாவது எடுத்தாக வேண்டும் என போராடி முதல் நாள் படப்பிடிப்பு செல்ல, இடியாக வந்து விழுகிறது ஒரு செய்தி.

பிறகு அந்த பிரச்சனையை சமாளித்தார்களா, படத்தை எதிர்பார்த்தது போல் கருணா எடுத்தாரா என்பதை கலகலப்பாக கூறியிருக்கிறார் ராதாமோகன்.

படத்தை பற்றிய அலசல்

கருணா, இத்தனை நாள் காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் கலக்கி வந்த இவர், முதன்முதலாக முழு நீள ஹீரோவாக களமிறங்கியுள்ளார், வாய்ப்புக்காக ஏங்கும் சந்திரனாக.

கிடைத்த வாய்ப்பு நன்றாக இல்லாமல் போக, ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காக இவர் இயக்க முடிவு செய்யும் காட்சி என அனைத்து எக்ஸ்பிரசனிலும் பட்டையை கிளப்புகிறார். படத்தில் இவருக்கு ஜோடி கூட உள்ளது. ரொமான்ஸ் தான் கொஞ்சம் தடுமாற்றம்.

நந்திதா ஓவர் ஆக்டிங் செய்ய வேண்டும் என்கின்ற கதாபாத்திரம் நடிக்க தெரியாமலேயே நன்றாக நடித்துள்ளார்.

ராதாமோகன் படம் என்றாலே திரையில் ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் கதாபாத்திரம் கூட சின்ன வசனத்தில் கவர்ந்து இழுக்கும், அந்த வகையில் இதில் எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், டவுட்டு செந்தில், மயில்சாமி, குமரவேல், டாடி சரவணன், நாரயணன் என அனைவரும் செம்ம ஸ்கோர் செய்கிறார்கள்.

அதிலும் மயில்சாமியின் சகுனம் பார்க்கும் காமெடி வயிறு குலுங்க வைக்கின்றது. இது மட்டுமின்றி சாம்ஸின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் தான் இந்த படம், தமிழ் சினிமா இயக்குனர்கள் தொடர்ந்து மிஸ் செய்யும் மிகச்சிறந்த காமெடியன் சாம்ஸ்.

படத்தின் உயிரே பொன் பார்த்திபனின் வசனங்கள் தான் இந்த வசனத்தை ரசித்து முடிப்பதற்கு அடுத்த வசனம் வந்து விடுகிறது. குறிப்பாக ‘இவ ஆக்டிங்க பார்த்தா.. புத்தருக்கே கோபம் வந்துடும்’, ’காரி துப்புனன்னா நெஞ்சில ஓட்டை விழுந்துடும்’, ’டாட்ட சுமோல பஞ்சர் ஒட்டலாம், டைட்டானிக்கே பஞ்சர் ஒட்ட முடியுமா’ போன்ற காமெடி வசனமாக இருந்தலும் சரி, ”வலி இல்லாத மனுஷனே இல்ல, வலி இருந்தா தாண்டா அவன் மனுஷன்” என அர்த்தமுள்ள வசனமாக இருந்தாலும் சரி ’ராதாமோகன் இஸ் பேக்’ என்று சொல்ல வைக்கின்றது. ஸ்டீவின் இசை சுமார் ரகம் தான்.

க்ளாப்ஸ்

வசனம்..வசனம்…வசனம்…என 10 முறை கூட சொல்லலாம், கதையே இல்லை என்றாலும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வலுவாக உள்ளதால் ரசிக்க வைக்கின்றது.

டவுட்டு செந்தில் தவறாக பேசும் ஆங்கிலம் ரசிக்க வைக்கின்றது, நல்ல எதிர்காலம் உள்ளது செந்தில். கருணா தான் ஹீரோ என்றாலும் அனைத்து கதாபாத்திரமும் மனதில் பதிகிறது.

பல்ப்ஸ்

படத்தின் ஒளிப்பதிவு ஏதோ குறும்படம் போல் உள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சிலருக்கு நாடகம் பார்க்கும் எண்ணம் கூட தோன்றலாம்.

படத்தில் கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை என்றாலும், ராதாமோகன் படம் என்றாலே கொஞ்சம் அழுத்தமான காட்சிகள் இருக்கும், இதில் அது மிஸ்ஸிங். சில நேரங்களில் நாம் ஏதும் ஸ்டேண்டப் காமெடி ஷோ வந்திருக்கோமா என தோன்ற செய்கிறது.

மொத்தத்தில் உப்பு கருவாடு ஜாலியாக ஒரு முறை சுவைக்கலாம்.

Loading...