இரும்பு குதிரை

தமிழ் சினிமாவின் புதிய பரிமாணத்தின் வளர்ச்சி தான் இந்த இரும்பு குதிரை. தன் காதலுக்காக போராடும் இளைஞன், நமக்கு பழக்கப்பட்ட கதை என்றாலும் இதை பைக், ரேஸ் என புதிய கோணத்தில் கொடுத்து அசத்தியிருக்கிறார் யுவராஜ் போஸ்.
பரதேசி என்ற தரமான படத்திற்கு பிறகு இன்னும் பல பேரின் கவனத்தில் அதர்வா தேர்ந்தெடுத்த படம் தான் இரும்பு குதிரை. தன்னை ஒரு பைக் ரேஸ் வீரராக காட்டிகொள்ள சிக்ஸ் பேக்கெல்லாம் வைத்து மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
அதர்வா கதாநாயகனாக இருக்கும் போது காதல் இல்லாமல் எப்படி? வழக்கம் போல் கதாநாயகி ப்ரியா ஆனந்துடன் காதல். ஆனால் அந்நியன் படத்தில் வரும் அம்பி போல் அதர்வா ரூல்ஸ் ராமனுஜமாக சாலை விதிகளை பின்பற்றுகிறார்.
இந்த அவசர உலகத்தில் யார் இப்படி எல்லாம் இருப்பார்கள் என்று அனைவரும் அவரை கிண்டல் செய்ய, அதர்வாவும் அதை கண்டுகொள்வதாக இல்லை. பின் ஒரு கட்டத்தில் ப்ரியா ஆனந்தே பொறுமை இழந்து டுக்காட்டி பைக் சிபாரிசு செய்கிறார்.
பின் அந்த பைக்கில் ECR ரோட்டில் ரேஸ் விட்டு பட்டையை கிளப்புகிறார். காதல், காமெடி என வாழ்க்கை சந்தோஷமாக செல்ல, திடீரென்று வில்லன் ஜானியால் ப்ரியா ஆனந்த் கடத்தப்படுகிறார். இதோடு இடைவேளை விடப்படுகிறது.
இதை தொடர்ந்து ப்ரியா ஆனந்தை தேடி செல்ல, என்ன ஆகிறது என்பது தான் மீதிக்கதை.
படத்தின் பலமே பைக் ரேஸ் காட்சிகள் தான், குறிப்பாக இடைவேளை முன்பு வரும் அந்த சண்டைக்காட்சி, பின் இரண்டாம் பாதியில் வில்லனிடம் மோதும் பைக் ஸ்டண்ட் என அட்டகாசம் செய்துள்ளனர். அதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையும், குருதேவ் ஒளிப்பதிவும் பக்க பலமாக உள்ளது.
வில்லன் நடிகராக வரும் ‘7ம் அறிவு’ புகழ் ஜானி, நீண்ட இடைவேளை என்றாலும் அதேபோல் நடிப்பில் மிரட்டி எடுத்திருக்கிறார். ப்ரியா ஆனந்த் இன்னும் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கலாம்.
தேவையில்லாத இடத்தில் வரும் பாடல்கள், சில வெறுப்பேற்றும் காமெடி காட்சிகள் போன்றவை படத்தின் வேகத்தை குறைக்கிறது. இயக்குனர் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் இரும்பு குதிரை அதர்வாவை நம்பி ஜாலி ட்ரிப் அடிக்கலாம்.

Loading...