சலீம்

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

படத்தை பார்க்கும் முன்னரே அனைத்து மக்களுக்கும் தோன்றும் ஒரு கேள்வி. இந்த சலீம் நான் படத்தின் இரண்டாம் பாகமா? இதை படத்தை பார்த்து தான் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.எல்லோருக்கும் உதவி செய்யும், எந்த வம்புகளுக்கும் போகாத, சட்ட திட்டங்களை மதிக்கக்கூடிய நல்ல மனிதராக இருக்கும் விஜய் ஆண்டனி பணத்திற்காக அலையும் ஒரு மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார்.

எல்லாவற்றிலும் விஜய் ஆண்டனிக்கு நேர்மாறாக இருக்கும் அக்ஷாவுடன் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். ஆனால், விஜய் ஆண்டனியின் பொறுமையான குணமும், தனக்காக நேரம் ஒதுக்காமல் எப்போதும் மருத்துவமனையே கதி என இருக்கும் அவரின் சேவை மனப்பான்மையும் அக்ஷாவுக்கு பிடிக்காமல் போகிறது.

இதனால் ஒரு கட்டத்தில், விஜய் ஆண்டனியை பிடிக்கவில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார் அக்ஷா. அதே நேரம், ஏழைகளிடம் பணம் வாங்காமல் அடிக்கடி சிகிச்சை செய்யும் விஜய் ஆண்டனியை பணி நீக்கம் செய்கிறது அவர் வேலை பார்க்கும் மருத்துவமனை.

அந்த விரக்தியில் சரக்கு அடித்துவிட்டு, ‘ஒன்வே’யில் வரும் போலீஸ்காரர் ஒருவருடன் சண்டை போட விஜய் ஆண்டனியை ஜெயிலில் தள்ளுகிறது போலீஸ்.எல்லா பக்கமும் தன்னை நோக்கி பிரச்சனையாக வெடிக்க, போலீஸின் துப்பாக்கியை பிடிங்கிக் கொண்டு தப்பிச் செல்கிறார்.

அங்கிருந்து ஹோட்டல் ஒன்றிற்குச் செல்லும் விஜய் ஆண்டனி மத்திய அமைச்சரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை ஹோட்டல் ரூமில் கடத்தி வைக்கிறார். அதன் பிறகு மொத்த சிட்டியும் பதட்டமாக, அந்த ஹோட்டல் முன் குவிகிறது போலீஸும், மீடியாவும். விஜய் ஆண்டனி எதற்காக அமைச்சரின் மகனை கடத்துகிறார்? போலீஸ் என்ன செய்யப்போகிறது என்பதே மீதிக்கதை.

நான் படத்தில் நம்மை எல்லோரையும் கவர்ந்தது போல் இந்த படத்திலும் தம் எதார்த்த நடிப்பால் கவர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி. ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்று ஆடியன்ஸை நகம் கடிக்க வைத்ததில் இயக்குனர் நிர்மல் குமாரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் மிரட்டியுள்ளார்.அதற்கு பக்க பலமாக விஜய் ஆண்டனி இசை மிகவும் உதவுகிறது.

அதிலும் குறிப்பாக பின்னணி இசையில் மிகவும் மெனக்கெட்டு உள்ளார்.ஆனால் முதல் பாதி நம் பொறுமையை மிகவும் சோதிக்கிறது, கதாநாயகி முகத்தில் நடிப்பு என்பதே வரவில்லை, அதை மட்டும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

Loading...