அரண்மனை-2

ஹாலிவுட் படங்களில் தான் ஹிட் அடித்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த பாகமாக எடுப்பார்கள். இந்த கலாச்சாரம் சில காலமாக தமிழ் சினிமாவையும் தொற்றியுள்ளது. ஆனால், இதில் ஒரு சில படங்கள் தோல்வியையும் சந்தித்து, தொடர் பாகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஆனால், தனக்கு என்ன ஸ்பெஷலோ, ஆடியன்ஸ் எதை விரும்புகிறார்களோ அதை சரியாக புரிந்துக்கொண்டு சுந்தர்.சி தன் அரண்மனை வெற்றியை தொடர்ந்து அரண்மனை-2வை இயக்கியுள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் 500 திரையரங்குகளுக்கு மேல் வெளிவந்துள்ளது.

கதைக்களம்

பேய் படங்களுக்கு என சில டெம்ப்ளைட் கதைகள் இருக்கும், இதை ஏற்கனவே அரண்மனையில் சுந்தர்.சி தொட்டு வெற்றியும் கண்டுவிட்டார். இரண்டாம் பாகத்திலும் கிட்டத்தட்ட ஒரே கதை தான்.

ஊர் பெரியவரான ராதாரவி, தன் மகன் சித்தார்த்துக்கும் த்ரிஷாவிற்கும் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். அப்போது அவர்கள் தங்கியிருக்கும் அரண்மனையில் ஒரு அமானுஷியம் உலா வருகின்றது. ஓர் ஆவி தன் அப்பா ராதாரவியை தாக்குவதை கண்முன் பார்க்கின்றார் சித்தார்த்.

பின் கோமா ஸ்டேஜுக்கு செல்கிறார் ராதாரவி. இதன் பின் அந்த வீட்டில் சில அசம்பாவிதங்கள் நடக்க, எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் சுந்தர்.சி எண்ட்ரி ஆகிறார். இதற்கு பின் அந்த வீட்டில் நடப்பதை கண்டறிய சுந்தர்.சி வீடு முழுவதும் கேமரா பொருத்துகிறார்.

அந்த கேமராவில் ஒரு உருவம் சித்தார்த்தின் அண்ணன் சுப்புவை இழுத்து செல்வதை பார்க்கிறார்கள், உற்று பார்க்கும் போது தான் தெரிகின்றது, அந்த ஆவி ஹன்சிகா என்பது. இதை தொடர்ந்து ஹன்சிகா யார்? எதற்காக இவர்கள் குடும்பத்தை பழி வாங்குகின்றார் என்பதை கமர்ஷியல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கொடுத்துள்ளார் சுந்தர்.சி.

படத்தை பற்றிய அலசல்

சித்தார்த் பெரிதாக நடிக்க கதாபாத்திரம் இல்லை, சென்ற பாகத்தில் வினய் என்ன செய்தாரோ, அதையே தான் செய்துள்ளார். ஆனால், த்ரிஷாவிற்கு செம்ம பெர்பாமன்ஸ். க்ளாமர் பேயாக கலக்குகிறார். ப்ளாஷ்பேக்கில் வரும் ஹன்சிகாவும் தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்தது மட்டுமின்றி கொஞ்சம் கண்கலங்கவும் வைக்கின்றார்.

ராதாரவி, சூரி, மனோ பாலா, கோவை சரளா என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் உள்ளது. இவர்களை அனைவரையும் ரசிகர்கள் மனதில் பதியும் படி காட்சிகள் அமைத்ததற்கே சுந்தர்.சிக்கு ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்.

சுந்தர்.சியும் அவர் பங்கிற்கு களத்தில் இறங்கி சந்திரமுகி ரஜினிகாந்த் பணியை செய்துவிட்டு செல்கிறார். சுந்தர்.சி படத்தின் மிகப்பெரும் பலமே காமெடி காட்சிகள் தான். ஆரம்பத்தில் சூரி எப்படி செட் ஆவார் என்று நினைத்தாலும், படம் செல்ல செல்ல, அடாவடி செய்கிறார். அதிலும் குறிப்பாக த்ரிஷா பேய் என்று தெரியாமல் மனோபாலா, சூரி செய்யும் காமெடி காட்சிகள் திரையரங்கமே குலுங்குகின்றது.

இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் கோவை சரளா. இவர் வசனம் பேச வேண்டும் என்பது கூட இல்லை, ஒரு ப்ரேமில் வந்து நின்றாலே போதும் ரசிகர்களுக்கு சிரிப்பு சரவெடி தான்.

ஹிப்ஹாப் தமிழனின் இசையில் குச்சிமுட்டாய் பாடல் எழுந்து ஆடவைக்கின்றது. அட சாமி பாட்டெல்லாம் இசையமைத்திருக்கிறார் ஆதி என்று ஆச்சரியப்படவைக்கின்றது. ஆனால், பின்னணி இசையில் கான்ஜுரிங் இசை எல்லாம் வருதே சார்????.

க்ளாப்ஸ்

சுந்தர்.சி நான் கமர்ஷியல் ரசிகர்களுக்கு மட்டும் தான் படம் இயக்குகிறேன் என்று உணர்ந்து திரைக்கதை அமைத்துள்ளார்.

காமெடி காட்சிகள், எதிர்ப்பார்த்து வருபவர்களுக்கு செம்ம விருந்து.

படத்தின் முதல் பாதியில் வரும் திகில் காட்சிகள், இது தான் நடக்க போகின்றது என தெரிந்தாலும் ஆதியின் இசையில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

பல்ப்ஸ்

பல படங்களில் பார்த்த காட்சிகள், ரசிகர்கள் யூகிக்க கூடிய அடுத்தடுத்த காட்சி அமைப்புக்கள். பேய் படம் தான், இருந்தாலும் இன்னும் அதே பழைய டெம்ப்ளேட் காட்சிகளை பயன்படுத்த வேண்டுமா?.

கமர்ஷியல் படம் தான் அதிலும் பேய் படம் தான் இதில் லாஜிக் பார்க்க கூடாது என்றாலும், கண்களுக்கு அப்பட்டமாக தெரிகின்றது பல லாஜிக் மீறல்கள், குறிப்பாக சுந்தர்.சி பேயாக மாறி சித்தார்த்தை துரத்திக்கொண்டே தான் கடைசி வரை செல்கிறார்.