ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ”கத்தி”! விஜய்யின் முந்தைய படங்களான ”காவலன்”, ”துப்பாக்கி”, ”தலைவா” படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல் நாள் வரை படம் வெளிவருமா, வெளிவராதா என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது கத்தி!!
கதிரேசன், ஜீவானந்தம் என்று இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருக்கிறார். தன்னூத்து என்கிற கிராமத்தில் இருக்கும் வறட்சியை காரணமாக வைத்து ஐடி கம்பெனி ஒன்று அந்த கிராமத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது. ஆனால் அதே ஊரில் பிறந்து வளர்ந்த மேல்படிப்பு வரை படித்த ஜீவானந்தம் அதை தடுக்க முயற்சி செய்கிறார்.

தன்னூத்து என்கிற கிராமம் பல வருடங்களுக்குமுன் நல்ல செழிப்புடைய கிராமமாக இருந்ததும், அந்த கிராமத்தில் ஒரு நீர் ஊத்து கால்வாய் இருப்பதும் தெரிந்து கொண்டு அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.ஆனால் இதை தடுத்து ஜீவானந்தத்தை கொலை செய்ய முயற்சி செய்கிறார் ஐடி நிறுவனத்தின் முதலாளியான நீல்நிதின் முகேஷ். கோர்ட்டில் கேஸ் போட்டு அதை நடத்துவதற்காக பணம் தேவை என்ற காரணத்திற்காக அந்த கிராமத்திலிருக்கும் அனைத்து ஆண்களும் வெளியூர் சென்று வேலை பார்க்கிறார்கள்.Vijay_1

சம்பாதிக்கும் பாதி பணத்தை வீட்டிற்கும், மீதி பணத்தை கேஸ் நடத்தவும் உதவுகிறார்கள்.கொல்கத்தா சிறையில் கைதியாக இருப்பவர் கதிரேசன் இன்னொரு விஜய். அதே சிறையில் இருக்கும் ஒரு கைதி தப்பித்துவிட அவரை பிடிக்க கைதியான விஜய்யின் உதவியை நாடுகிறது போலீஸ், தப்பி சென்ற கைதியை பிடிக்க இவர் போடும் பிளான், அடங்கப்பா கைத்தட்டல்களை அள்ளுகிறது திரையரங்கில். தப்பிச்சென்ற கைதியை பிடிக்க உதவும் கதிரேசன். போலீசுக்கு டிமிக்கி காட்டிவிட்டு சென்னைக்கு வந்துவிடுகிறார். உடனே பாங்காக் செல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்க யதேச்சையாக சமந்தாவை பார்க்கிறார். ‘இவள எப்படியாவது கரெக்ட் பண்ணிடனும்டா’ என்று விஜய் சொல்லும் அழகு ஐய்யோ… சூப்பர்ஜி…சந்தர்ப்பம், சூழ்நிலையால் கதிரேசன், ஜீவானந்தம் இடத்துக்கு வர நேர்கிறது.

ஆரம்பத்தில் ஜீவானந்தம் யார் என்று தெரியாமல் கிடைத்த பணத்தை சுருட்டிக் கொண்டு பாங்காக் செல்ல திட்டமிடும் கதிரேசன். பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஜீவானந்தமாகவே மாறி எதிரிகளை நய்யப்புடைக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் கதிரேசன் செய்யும் அனைத்து காரியங்களும் நம் கண் இமை மூடாமல் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது. இறுதியில் அந்த கிராமம் என்ன ஆனது? விவசாயிகளின் நிலை என்ன? என்பதே க்ளைமேக்ஸ்…கதிரேசன், ஜீவானந்தம் என்று இரண்டு வேடங்களில் பட்டைய கிளப்பியிருக்கிறார் விஜய்.

இதுவரை விஜய் நடித்த இரண்டு வேடங்கள் படங்களில் இது வித்தியாசமானதாகவும் விஜய்க்கு முக்கிய படமாகவும் இது அமைந்திருக்கிறது. பாடல்களில் எப்பவும்போல விஜய்யின் நடனத்தை குறை சொல்லவே முடியாது, அடிக்கடி இவர் காட்டும் அந்த குழந்தைதனமான சிரிப்பும், செய்கையும் மனதை அள்ளுகிறது.சமந்தாவுக்கு தமிழில் ஒரு நல்ல படம் என்றால் அதில் கத்தி படம் முதல் இடத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, பாடல் காட்சி, முத்தக்காட்சி என்று கதாநாயகியை பயன்படுத்தாமல் ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்டைலில் நாயகிக்கும் ஒரு முக்கிய பொறுப்பை கொடுத்திருக்கிறார்.Kaththi

வாழ்த்துகள் சமந்தா இனி சமத்தா நடிக்கனும் சரியா…காமெடிக்கு சதீஷ், விஜய் இரண்டு பேரும் செய்யும் அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல, இருந்தாலும் சதீஷ்க்கு இடம் கொடுத்து அவரை வளர வைத்திருக்கிறார் விஜய். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பாதியில் கழண்டு கொள்ளாமல் படத்தின் இறுதி வரை பயணிக்கிறார்கள்.இசை அனிருத். இளைஞர்களின் நாடி, நரம்பை தேடி தேடி அதை சுண்டிவிடும்படி பாடல்களை அமைத்திருக்கிறார்.

பின்னணி இசையில்தான் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஒளிப்பதிவு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் பாடல் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் அவ்வளவு அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக “ஆத்தி என நீ” பாடல் இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிறது…

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்று சொல்லும் பல அரசியல்வாதிகள் வெளிநாடு கம்பெனிகளிடமிருந்து கோடி கோடியாய் பணத்தை வாங்கிக் கொண்டு சொந்த பூமியை விபச்சார பூமியாக்கிக் கொண்டிருக்கிறோம். தினம் தினம் நாம் உண்ணும் உணவை வியர்வை சிந்தி உற்பத்தி செய்யும் விவசாயி ஒருவேளை உணவை வயிறு நிரம்ப சாப்பிடுகிறானா என்றால் அது கேள்விக்குறியே?… இப்படி ஒரு படைப்பை தர முன்வந்த விஜய்க்கும், ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் பெரிய நன்றி கலந்த வாழ்த்துகளை சொல்லியாக வேண்டும்.

மொத்தத்தில் கத்தி – விவசாயிகளின் வெற்றி