தாமிரபரணி படத்திற்கு பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ”பூஜை”.பணத்துக்காக யாரையும் கொலை செய்யும் கூலிப் பட்டாளத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கின்றது ‘பூஜை’ திரைக்கதை.கோயம்புத்தூர் பக்கம், சந்தையில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஆளாக விஷால் அறிமுகம். வழக்கம்போல், வில்லன் கோஷ்டிகளோடு மோதலில் தொடங்குகின்றது படம்.

விஷாலுக்கு அல்லக்கைகளாக வழக்கம் போல் சூரியுடன் சேர்ந்து நகைச்சுவை நடிகர்கள் பட்டாளம்.அழகான பணக்கார கதாநாயகி சுருதிஹாசன்-விஷால் சந்திப்பு ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் நிகழ்கின்றது. அடுத்தடுத்து அவர்களுக்குள் நிகழும் சந்திப்புக்களைத் தொடர்ந்து சுருதியிடம் தனது காதலைச் சொல்கின்றார் விஷால்.

“உனக்கு என்ன தகுதி இருக்கின்றது, என்னைத் திருமணம் செய்ய?” எனக்கூறி அந்தக் காதலைப் புறக்கணிக்கின்றார் சுருதி.அதன்பின்னர் விஷாலின் பின்புலம் காட்டப்படுகின்றது – கோவையிலேயே பெரிய பணக்காரக் குடும்பம் ஒன்றிற்கு அவர்தான் வாரிசாம்! ஒரு குடும்பப் பிரச்சனையால், தாயின் கட்டளையால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்கிறாராம்!இதற்கிடையில், காவல் துறையின் உயர் அதிகாரி சத்யராஜை கொலை செய்ய முற்படும் வில்லனின் கூலிப் பட்டாளத்தோடு எதேச்சையாக மோதி சத்யராஜைக் காப்பாற்றும் விஷாலுக்கும், வில்லன் முகேஷ் திவாரியின் கும்பலுக்கும் பகைமை ஏற்படுகின்றது.

ஆனால், விஷாலுக்கும் வில்லன் முகேஷூக்கும் ஒருவரை ஒருவர் முகம் தெரியாது. அதே சமயத்தில், விஷாலின் சொந்த கிராமத்தில் இருக்கும் அவர்களின் குலதெய்வக் கோயிலுக்கும் இதே முகேஷ்தான் அறங்காவலராக இருந்து அட்டூழியங்கள் செய்கின்றார்.முகேஷ் நேரடியாக விஷாலின் குடும்பத்தினர்களைத் தாக்கவும், இடையூறு செய்யவும் முற்பட, அந்த கட்டத்தில் விஷாலின் அம்மா ராதிகாவுக்கும் விஷாலின் நல்ல குணம் தெரிய வர, பிரச்சனையைச் சமாளிக்க கிராமத்து வீட்டிற்கு விஷாலை வரச் சொல்கின்றார் ராதிகா.

குடும்பத்தினர் எல்லாரும் தங்களின் நிலத்தை கோயிலுக்கு தானம் செய்யவும், குலதெய்வப் பூஜையில் கலந்து கொள்ளவும் கிராமத்து வீட்டில் ஒன்று கூட, விஷாலும் அங்கு வந்து சேர்ந்து கொள்கிறாார்.இதற்கிடையில் மனம் மாறி விஷாலைக் காதலிக்கத் தொடங்கும் சுருதியும் வில்லன் கோஷ்டி பிரச்சனையால் குடும்பத்தோடு, விஷால் குடும்பத்தினரோடு வந்து இணைந்து கொள்ள – அப்போதுதான் வில்லனுக்கும் விஷாலுக்கும் ஒருவருக்கொருவர் யார் என்பது தெரிய வருகின்றது.அதன் பின்னர் இருவருக்கும் இடையிலான மோதல்களால் என்ன நடக்கின்றது என்பதுதான் இடைவேளைக்குப் பின் தொடரும் மீதிக் கதை.

வாசு எனும் வாசுதேவனாக விஷால், செய்யாத குற்றத்திற்காக குடும்பத்தை பிரிந்து தாயின் அன்பிற்கு ஏங்கும் காட்சிகளிலாகட்டும், ஸ்ருதிஹாசன் உடனான காதல் காட்சிகளாகட்டும், ஒற்றை ஆளாய் 30-40 ஆட்களை அடித்து துவம்சம் செய்வதிலாகட்டும், சூரியுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் கலக்குவதிலாகட்டும்… அனைத்தையும் அசால்ட்டாக செய்து சக்கைபோடு போட்டிருக்கிறார்.

கீப்ட்-அப் விஷால்!ஸ்ருதிஹாசன் மாடர்ன் பெண்ணாக வந்து கிளாமரில், குடும்ப பெண்ணாகவும் பளிச்சிடுகிறார்.பரோட்டா சூரி – பிளாக் பாண்டி – இமான் அண்ணாச்சி கூட்டணி காமெடியில் களை கட்டுகிறது. அதிலும் அந்த உரித்த வாழைப்பழ காமெடி சிரிப்பு வெடி.போலீஸ் ஆபிசராக வரும் சத்யராஜ், பழைய கதாநாயகிகளான விஷாலின் அம்மாவாக வரும் ராதிகா, சித்தாரா, ரேணுகா, கெளசல்யா மற்றும் தலைவாசல் விஜய், ஜெய்பிரகாஷ், பிரதாப் போத்தன், வில்லன் முகேஷ் திவாரி உள்ளிட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், ”இப்படியே… என தொடங்கும் பாடல் உள்ளிட்ட 6 பாடல்களும் ‘நச்’ என்று இருக்கிறது. ப்ரியனின் ஒளிப்பதிவு, வி.டி.விஜயன்-டி.எஸ்.ஜாய் இருவரது படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், ‘பூஜை’க்கு மாவிலை தோரணம் கட்டியிருக்கின்றன.

ஹரியின் எழுத்து-இயக்கத்தில், ‘பூஜை’ படம் படு ஸ்பீடாக செல்வது, இந்த தீபாவளி ரேசில், இளைய தளபதியை காட்டிலும், புரட்சி தளபதியின் படத்திற்கு மவுஸை கூட்டியிருக்கிறது.

ஆக மொத்தத்தில் பூஜை – அதிரடிக்கு பஞ்சமில்லை

Loading...