சத்ரு திரைவிமர்சனம்

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு பிறகு கதிரின் மீது தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். இதை அவர் அடுத்த படத்தில் பூர்த்தி செய்துள்ளாரா பார்ப்போம்.

சத்ரு திரைவிமர்சனம்
சத்ரு திரைவிமர்சனம்

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு பிறகு கதிரின் மீது தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். இதை அவர் அடுத்த படத்தில் பூர்த்தி செய்துள்ளாரா பார்ப்போம்.

கதைக்களம்

கதிர் துடிப்பான இளம் எஸ்.ஐ ஆக நடித்துள்ளார். உயர்அதிகாரிகளின் உத்தரவையும் மீறி தடாலடியாக இறங்கி ரவுடிகளை வெளுத்து வருகிறார்.

அதேநேரத்தில் மதுரையிலிருந்து சென்னை வந்து தங்கியிருக்கும் 5 நண்பர்கள் குழந்தையை கடத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்.

நகைக்கடை உரிமையாளரான ரிஷியின் மகனை கடத்திவைத்து 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள். அந்த பணத்தை கொண்டு செல்லும் கதிர் குழந்தையை காப்பாற்றி அந்த கும்பலில் ஒருவனை சுட்டுக்கொல்கிறார்.

அதிகாரிகள் உத்தரவை மீறி என்கவுண்டர் செய்ததால் 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதேநேரத்தில் நண்பனை சுட்டுக்கொன்றதால் மற்றவர்கள் கதிரின் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் கொலை செய்யவேண்டும் என வெறியோடு சுற்றுகிறார்கள்.

அண்ணன் மகளை கார் ஏற்றிக்கொல்லமுயற்சிக்கின்றனர். குழந்தை மருத்துவனையிலிருக்க குடும்பத்தில் மற்றவர்களையும், நண்பர்களையும் காப்பாற்றினாரா? அந்த கும்பலை காலி செய்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

படம் முழுவதும் இளம் குற்றவாளிகளாகவே வலம் வருகின்றனர். 5 பேர் கும்பலின் தலைவனாக லகுபரன் நடித்துள்ளார். ராட்டினம் படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் இதில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவு. உடன்வரும் நண்பர்களாக ஆதித்யா டிவி குரு, அருவி பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் நீலிமா ராணி, கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே, சுஜா வருணி வரும் பெண்கதாபாத்திரங்களுக்கும் சொல்லிக்கொள்ளும்படியாக அழுத்தமான கதாபாத்திரம் இல்லை.

பரியேறும் பெருமாள் சாயல் இல்லாமல் போலிஸாக மிடுக்காக நடித்துள்ளார் கதிர். இப்படம் இவருக்கு அடுத்த ஒரு வெற்றிப்படம் என்றே கூறலாம். படம் முழுவதும் முறைத்தபடியே வருகின்றார். இவருக்கும், லகுபரனுக்கும் நடக்கும் Cat & Mouse விளையாட்டு தான் கதையே.

திரைக்கதை சிறப்பாக எழுதி அறிமுக இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் இயக்கியுள்ளார். பின்னணி இசையை நன்றாகவே கொடுத்துள்ளார் அம்ரீஷ் கணேஷ். படத்தின் பெரும்பாலான பகுதி இரவிலேயே நடக்கிறது. ஆனாலும் ஒளிப்பதிவை சிறப்பா செய்துள்ளார் மகேஷ் முத்துசாமி.

படத்தில் பல இடங்களில் போலிஸ் என்ன செய்கிறார்கள் என்று கேட்கவைக்கும் அளவுக்கு லாஜிக் மீறல் இருக்கிறது. படம் ஆரம்பித்ததிலிருந்து அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்புடன் படம் நகர்கிறது.

ஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேல் எப்போது முடியும் என்ற சலிப்பையும் ஏற்படுத்துகிறது.

நான் மகான் அல்ல உட்பட சில க்ரைம்திரில்லர் படங்களின் சாயலும் நமக்கும் நினைவுபடுத்துகிறது.

க்ளாப்ஸ்

தேவையில்லாத பாடல்களை திணிக்காமல் படத்தை கொண்டு சென்ற விதம். கதிர், லகுபரனின் நடிப்பு

விறுவிறுப்பாக சென்ற திரைக்கதை.

பல்ப்ஸ்

சில க்ரைம் படங்களின் சாயல் வந்துபோகிறது. க்ரைம் படம் என்பதால் காமெடி காட்சிகள் பெரியளவில் இல்லை.

பரியேறும் பெருமாள் கதிரை நம்பி படத்திற்கு போனவர்களுக்கு படம் சத்ரு இல்லை.