‘பாபநாசம்’ படம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில்,‘‘இந்தப் படத்தை நான் மட்டுமே செய்ததாக எல்லோரும் பேசினார்கள். ஆனால் இந்தப் படம் பல பாத்திரங்களில் செய்த சமையல். ஏற்கெனவே இந்தப் படம் மூன்று மொழிகளில் வெற்றியடைந்த கதை.

அந்த கதையை கொண்டுவந்து கொடுத்தார்கள். நாங்க இணைந்து அதை இன்னமும் அழகாக செய்திருக்கிறோம். இடைவேளைக்குப் பிறகு இப்படத்தில் கௌதமி நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் அவருடைய நடிப்பை பார்த்தபோது, இவ்வளவு நாள் அவரை வீட்டில் வைத்து பூட்டி விட்டோமா என்று எனக்கு இப்போது வருத்தமாக இருக்கிறது.

‘பாபநாசம்’ படத்தை திருநெல்வேலியில் எடுக்க காரணம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று தான்! இப்படத்தில் எல்லோரும் திருநெல்வேலி வட்டார மொழி பேசி நடித்திருக்கிறோம்.

அதற்கு உறுதுணையாக இருந்தவர் எழுத்தாளர் சுகா, திருநெல்வேலி வட்டார வழக்கில் நிறைய கஷ்டப்பட்டு, கத்துக்கிட்டு தான் பேசியிருக்கிறோம்’’ என்றார்.