திரைப்பட வசனங்கள் அரசியல் கட்சிகள் தீர்மானித்தால் பிறகு தணிக்கை குழு என்ற ஒன்று எதற்கு அமைக்கப்பட வேண்டும் என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இந்த படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறை, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்து நடிகர் விஜய் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது பாஜகவை கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் நடிகர் விஷால் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் நடிகர் விஷால் மெர்சலை பாராட்டி அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், மெர்சல் படத்தில் சமூக கருத்துகளை எடுத்துக் கூறியதற்கு நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் சில வசனங்களையும், காட்சிகளையும் ரத்து செய்ய கோரியிருப்பது கருத்து சுதந்திரத்துக்கு விடப்பட்ட மிரட்டல் ஆகும். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டல் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம்.

சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை மறு சென்சார் செய்ய கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தான் நினைத்ததை செய்யும் முழு கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு.

எல்லோரையும் திருப்திப்படுத்தும் முறையில் படம் எடுப்பது இயலாத காரியம். திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்களை அரசியல் கட்சிகளே தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு எதற்கு என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.