தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளை பாண்டவர் அணியே கைப்பற்றியுள்ளது.

இன்று காலை நடந்த வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 3,139 வாக்குகளில் 2,607 வாக்குகள் பதிவாகின. இதில் 1,824 வாக்குகள் நேரடியாகவும் 783 வாக்குகள் தபால் மூலமாகவும் பதிவாகின.

நடிகர் சங்க வரலாற்றிலேயே இதுவரையில்லாத வகையில் இந்தத் தேர்தலில்தான் மிக அதிகமானவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் 83 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய தேர்தல் பல்வேறு வாக்கு வாதங்கள், தள்ளுமுள்ளு மற்றும் உச்ச நடிகர்களால் நடிகர் சங்கப் பெயர் மாற்றம் தொடர்பான சர்ச்சைகள், ன எல்லாவற்றையும் கடந்து மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இதையடுத்து மாலை 6.30 மணியளவில் தேர்தல் அதிகாரி நீதியரசர் பத்மநாபன் தலைமையில்வாக்கு என்னும் பனி பலத்த போலிஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பதிவான 783 தபால் வாக்குகளில், அனைத்து பதவிகளிலுமே சரத்குமார் அணிதான் முன்னிலை வகித்தது.

ஆனால் சென்னையில் பதிவான வாக்குகளை எண்ண ஆரம்பித்ததும் நிலைமை அப்படியே தலைகீழானது. கடைசியாக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளை பாண்டவர் அணியே கைப்பற்றியது.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1,344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சரத்குமார் 1,231 பெற்று தோல்வியடைந்துள்ளார். நாசர் 113 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1,445 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாரவி 1138.வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 307 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் விஷால்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்தி 1493 வாக்குகள் பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர் கண்ணன் 1080 வாக்குகள் பெற்று 413 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு பாண்டவர் அணியின் சார்பில் போட்டியிட்ட கருணாஸ் 1362 வாக்குகள் பெற்றும், பொன்வண்ணன் 1235 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றுள்ளனர். தோல்வியடைந்த விஜயகுமார் 1115 வாக்குகளையும், சிம்பு 1107 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Loading...