நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் சரத்குமார், நடிகர் சங்கத்தில் வேற்றுமை மறந்து ஒற்றுமை நிலவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தோல்விக்கு பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், “நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு காழ்ப்புணர்ச்சி காரணமாக சில சம்பவங்கள் நடந்துவிட்டன. அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அனைவரும் ஒற்றுமையாக நடந்து கொள்ள வேண்டும்.

‘உங்களுடைய உதவி தேவை’ என்று நாசர் என்னிடம் இப்போது குறிப்பிட்டார். எந்த உதவிகளை.. எப்போது வேண்டுமானாலும் சங்கத்திற்காக செய்வதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நிச்சயம் செய்வேன்.

புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஸ்பை சினிமாஸ் உடனான ஒப்பந்தம் சிறந்தது என்று அவர்களுக்கு திரும்பவும் விளக்குவேன். ஒருவேளை அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய அவர்கள் நினைத்தால் ஸ்பை சினிமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் என்னாலான அனைத்து உதவிகளையும் செய்வேன். ஜனநாயக முறையில் தேர்தலை நடத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற நீதியரசர் பத்மநாபனுக்கு எனது நன்றிகள்…” என்றார்.

இதேபோல் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் ராதாரவி பேசுகையில், “இந்தத் தேர்தல் முடிவை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். கடுமையாக உழைத்து வெற்றி பெற்றுள்ள நடிகர் விஷாலுக்கும், அவரது அணியினருக்கும் எனது பாராட்டுக்கள்.” என்றார்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் பேசுகையில், “இந்தத் தேர்தலில் விஷால் அணியினர் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.