கபாலி படத்தில் மகளைத் தேடி அலையும் வயதான தாதா வேடத்தில், ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ் மற்றும் மெட்ராஸ் கலையரசன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி.

இதன் படப்பிடிப்பை சென்னை மற்றும் மலேசியாவில் நடத்தத் திட்டமிட்ட படக்குழுவினர், அதே போன்று தற்போது மலேசியாவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் படத்தில் வயதான தாதாவாக நடிக்கும் ரஜினி இந்தப் படத்தில் காணாமல் போன தனது மகளைத் தேடி அலைபவராக நடிக்கவிருக்கிறாராம்.

தாதா வாழ்க்கையை விட்டு விலகியிருக்கும் ரஜினி மீண்டும் தனது மகளுக்காக அந்த இருட்டு உலகத்திற்குள் போகிறார். காணாமல் போன மகளை மீட்டாரா, மீண்டும் தாதாவாக மாறினாரா போன்ற கேள்விகளுக்கான விடையாக கபாலி உருவாகி வருகிறது.

kabali2
கபாலி

ஏற்கனவே படத்தின் இயக்குநர் ரஞ்சித் இந்தப் படத்தில் ரஜினிக்கு பன்ச் வசனங்களோ, காதல் காட்சிகளோ கிடையாது என்று தெரிவித்து இருந்தார்.

ரஞ்சித் சொல்லியதையும் தற்போது வெளியாகி இருக்கும் தகவலையும் வைத்துப் பார்த்தால் ரஜினி, கபாலியில் தனது முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் படத்தின் கதையை மட்டுமே நம்புகிறார் என்று தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் இமேஜை விட்டு பன்ச் வசனங்கள், காதல் காட்சிகள் இல்லாமல் நடிக்கும் ரஜினியைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கபாலி ரஞ்சித்திற்கு ஹாட்ரிக்கை அருள்புரிவாரா?

Loading...