வீரம் படத்தில் அண்ணன் தம்பிகள் பாசத்தைப் படமாக்கினேன். வேதாளத்தில் அண்ணன் தங்கைப் பாசத்தைப் படமாக்கியுள்ளேன். இது பெண்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் என இயக்குநர் சிவா தெரிவித்தார்.

அஜீத்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கும் சிவா, அஜீத்தை வைத்து இயக்கும் இரண்டாவது படம் வேதாளம்.

இந்தப் படத்தின் தலைப்பை வைத்து இது பேய்ப் படமாக இருக்குமோ என்றெல்லாம் யூகங்கள் கிளம்பின. ஆனால் உண்மையில் இது பெண்களுக்குப் பிடித்தமான ஜனரஞ்சகப் படமாம்.

இதனை படத்தின் இயக்குநர் சிவாவே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “‘வேதாளம்,’ பேய்ப் படம் அல்ல. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படம். அதேபோல் இது, ‘தாதா’ படமும் அல்ல. படத்தில் நிறைய நகைச்சுவை காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் உள்ளன. படத்தில் திடீர் திருப்பங்களும் இருக்கும்.

இது, பெண்களுக்கான படம் என்றும் சொல்லலாம். அஜீத் ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். கொல்கத்தாவில் வேலை பார்க்கிற பெண்ணாக அவர் வருகிறார். அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் வருகிறார்.

வீரம் படம் அண்ணன் – தம்பிகள் பாசம் என்றால், வேதாளம் அண்ணன்-தங்கை பாசம்!”

Loading...