சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்த சீனியர் நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டுள்ளார்.

சென்னையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சென்னை தற்போது மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றது. இந்நிலையில் மேலும் கனமழை பெய்யும் என்று வேறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பார்க்கும் இடம் எல்லாம் வெள்ளமாக உள்ளதே இதில் மேலும் மழை பெய்தால் நாம் எல்லாம் என்ன செய்வது என்று சென்னை மக்கள் கவலையில் உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சீனியர் நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டுள்ளார். கண்ணாடி அணிந்து கைப்பையுடன் அவர் படகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் தத்தளித்த 62 ஆயிரம் பேரை மீட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.