“காதல்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சந்தியா. இவரின் திருமணம் கேரளாவில் எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது.

டிஸ்யூம், வல்லவன், கூடல்நகர் என்று 40க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் சந்தியா. இவருக்கும் சென்னையைச் சேர்ந்த வெங்கட் சந்திரசேகரன் என்பவருக்கும் நேற்று கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வைத்து மிக எளிமையான முறையில் திருமணம் நடந்துமுடிந்திருக்கிறது.

சென்னையில் சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்திவரும் வெங்கட் சந்திரசேகரன் அசோக்நகரைச் சேர்ந்தவர். சந்தியா வடபழனியில் வசிப்பதால், சென்னையில் ஏற்பட்ட கடுமழையால் இருவரும் தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்தார்களாம். பின்னர் இருவீட்டாரும் முடிவெடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் எளிமையான முறையில் திருமணம் நடத்தி முடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான “காதல்” படத்திற்காக சந்தியாவிற்கு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. தற்பொழுது தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.