அடாத மழையிலும் விடாத வசூல் என்று முன்பெல்லாம் படங்களுக்கு விளம்பரம் செய்வார்கள்.

ஆனால் இந்த முறை அப்படி பொய்யாக விளம்பரம் செய்தால் மக்கள் கல்லாலடிப்பார்கள்.

சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை, தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸையே துடைத்துப்போட்டுவிட்டது. மழை அவ்வளவாகப் பெய்யாத பகுதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

தீபாவளிக்கு வெளியான வேதாளம், தூங்கா வனம், இரு வாரங்களுக்கு முன் வெளியான உப்புக் கருவாடு, இஞ்சி இடுப்பழகி போன்ற படங்கள் மழையால் கடுமையான பாதிப்புக்குள்ளாகின.

சென்னையில் பல திரையரங்குகள் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன கடந்த வாரம் முழுவதும். குறிப்பாக காசி, உதயம், கமலா போன்ற அரங்குகளை வெள்ளம் சூழ்ந்து நின்றது. காசி தியேட்டருக்குள் வெள்ளம் புகுந்து நான்கைந்து தினங்கள் காட்சிகளே நடக்காத நிலை.

புறநகர்ப் பகுதிகள் மற்றும் வெளியூர்களில் மின்சாரமில்லாததால் பல அரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இது முன்னெப்போதுமில்லாத பெரிய பாதிப்பு. பல கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். கிட்டத்தட்ட 25 நாட்கள் மழை, வெள்ளம் எனப் போய்விட்டதால் தியேட்டர்களில் ஆட்களே இல்லாத நிலை.

இன்றிலிருந்துதான் பல அரங்குகள் முழுவீச்சில் இயங்கவிருக்கின்றன. ஆனால் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் (பழசாகிவிட்ட) படங்களைப் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!