கபாலியைத் தொடர்ந்து விஜய் 60… அடித்தது சந்தோஷ் நாராயணனுக்கு அதிர்ஷ்டம்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

கபாலி படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் எடிட்டர் பிரவீன் ஆகியோரை தான் அடுத்து இயக்கப் போகும் விஜய் 60 படத்திற்கு தேர்ந்தேடுத்திருக்கிறார் இயக்குநர் பரதன்.

அழகிய தமிழ் மகன் இயக்குநர் பரதன் அடுத்ததாக விஜய்யின் 60வது படத்தை இயக்கப்போகிறார். விஜய்யின் தெறி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.

இதனால் விஜய் 60 படத்தின் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைத் தேர்ந்தெடுப்பதில் தற்போது மும்முரம் காட்டி வருகிறார் பரதன்.

விஜய்யின் 60 வது படத்தை இயக்க முன்னணி நடிகர்கள் பலரும் காத்திருந்த நிலையில் அழகிய தமிழ் மகன் இயக்குநர் பரதனுக்கு அந்த வாய்ப்பை அளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் விஜய். அழகிய தமிழ் மகன் படத்தை வேறு ஒருவரின் கதையை வைத்து பரதனை எடுக்கச் சொன்னதாகவும், அந்தத் தவறை சரி செய்யும் விதமாகத் தான் பரதனின் கதையை அவரையே இயக்கச் சொல்ல விஜய் தனது 60 வது பட வாய்ப்பை அளித்தார் என்றும் தகவல்கள் வெளியானது.

விஜய்யின் 60 வது பட வாய்ப்பு கிடைத்ததில் பரதன் மிகவும் மகிழ்ந்து போன பரதன்,தற்போது படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் மிகவும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்.

விஜய் 60 படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், எடிட்டர் கேஎல் பிரவீன் என்பது உறுதியாகி விட்டது. கபாலி படத்தில் பணி புரிந்து வரும் இருவரையும் தனது அடுத்த படத்திற்கு பரதன் தேர்ந்தெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக சந்தோஷ் நாராயணன் மாறத் தொடங்கியிருக்கிறார்.

ஏற்கனவே துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த காஜல் அகர்வால் விஜய் 60 படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது காஜலுக்குப் பதிலாக வேறு ஒரு நாயகியை பரதன் தேடி வருவதாகக் கூறுகின்றனர்.

விஜய் 60 படத்தில் ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் மற்றும் காமெடி எல்லாம் கலந்து இருக்கும் என்று பரதன் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார். கிராமப்புற மற்றும் நகர பின்னணிகளில் விஜய் 60 உருவாகவிருக்கிறது.

விஜய்யின் 59 வது படமான தெறி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால் விஜய் 60 படப்பிடிப்பை ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். வீரம் படத்தைத் தயாரித்த விஜயா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...