தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் ஏ ஆர் முருகதாசை நடிகர்கள் அஜீத், விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

தமிழ் மற்றும் இந்திப் படவுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

தற்போது விஜய்யை வைத்து அவர் கத்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கின்போதுதான் ஏ ஆர் முருகதாஸ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். உணவுக் கோளாறு காரணமாகவே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இப்போது முருகதாஸ் உடல் நலம் தேறி வருகிறார்.

அவர் உடல்நிலை குறித்து கேள்விப்பட்ட பலரும் மருத்துவமனைக்கு நேரில் போய் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னணி நடிகர்கள் அஜீத், விஜய் மற்றும் சூர்யா ஆகிய மூவரும் இன்று காலை மருத்துவமனைக்குச் சென்று முருகதாஸை உடல்நலம் விசாரித்தனர்.

இந்த மூவருமே முருகதாஸ் இயக்கத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முருகதாஸ் இயக்குநராக அறிமுகமான தீனா படத்தில் அஜீத் நாயகனாக நடித்திருந்தார்.

துப்பாக்கியில் விஜய்யை வைத்து இயக்கிய முருகதாஸ், கத்தியில் மீண்டும் அவருடன் கை கோர்த்துள்ளார்.

கஜினி, ஏழாம் அறிவு என இரு முக்கியமான படங்களில் சூர்யாவை இயக்கியவர் முருகதாஸ்.

Loading...