கத்தி பட விவகாரத்தில் தயாரிப்பாளர் மாற்றப்பட்டால் தங்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை என்ற எதிர்ப்பாளர்களின் நிலையை படத்தின் நாயகன் விஜய்யும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

லைகா நிறுவனத்தின் முதல் தயாரிப்பான கத்தி படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார் விஜய்.

லைகா நிறுவனம் ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்பதால், அந்நிறுவனத்தின் படத்தை, இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை நிலவும் தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என 65க்கும் மேற்பட்ட அமைப்புகள் கிளர்ந்தெழுந்துள்ளன.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எவ்வளவோ முயன்றும் அது போதிய பலனைத் தரவில்லை. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட வெகு சிலர் தவிர, மற்றெல்லோரும் கத்தி படத்துக்கு எதிராகக் களமிறங்கியுள்ளனர்.

இந்தப் படம் வெளி வர என்னதான் செய்ய வேண்டும் என இயக்குநர் முருகதாஸ் மற்றும் விஜய் தரப்பில் கேட்கப்பட்ட போது, ‘தமிழ் அமைப்புகளுக்கு விஜய்யோ, முருகதாசோ எதிரிகள் அல்ல. அவர்கள் உள்ளிருக்கும் விஷயம் புரியாமல் லைகாவுடன் கைகோர்த்துவிட்டதாகவே கூட நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். எங்கள் கோரிக்கை, ராஜபக்சேவின் கூட்டாளிக்கு தமிழகத்தில் இடமில்லை, தமிழ் சினிமாவிலும் இடமில்லை. இதைப் புரிந்து கொள்ளுங்கள்,’ என்பதே என்று எடுத்துச் சொல்லப்பட்டது.

இதைக் கேட்ட விஜய், ‘ஆமா.. இது ஒப்புக் கொள்ளக் கூடியதுதான்..’ என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி படம் வெளியாக வேண்டுமானால் தயாரிப்பாளரை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை லைகா தரப்புக்கும் சொல்லி, படத்தை வேறு பேனரில் கொண்டு வரப்போகிறார்களாம்.

இதற்கிடையில் லைகா பேனரிலேயே, கத்தி படத்தின் இசை வெளியீட்டு விளம்பரங்கள், செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.